ARTICLE AD BOX
வடைக்கு மாவு தட்டும்போது சில முந்திரிப்பருப்புகளை வடைக்குள் வைத்து தட்டி எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்தால் சுவையான வடை தயார். முந்திரிப்பருப்புக்கு பதில் பனீர் துண்டையும் வைக்கலாம்.
பஜ்ஜிக்கு மாவு கரைக்கும்போது பச்சரிசி மாவுக்கு பதிலாக, இட்லி மாவைக் கரைத்துச் சுட்டாலும் பஜ்ஜி நன்கு உப்பலாக வரும். சுவையாகவும் இருக்கும்.
பாகற்காய் குழம்பு செய்யும்போது மாங்காய்த் துண்டுகள் சிலவற்றைச் சேர்த்து வேகவைத்தால், பாகற்காயின் கசப்பு குறைந்துவிடும்.
மசாலா சுண்டல் தயாரிக்கத் தேவையான பொடியை, நேரம் கிடைக்கும்போது வீட்டிலேயே தயார் செய்து காற்றுப்புகாத டப்பியில் போட்டு வைத்துக்கொண்டால், தேவைப்படும்போது சட்டென்று எடுத்து பயன்படுத்தலாம்.
வெண்பொங்கல் செய்யும்போது தேவையான தண்ணீருடன் ஒரு கரண்டி பால் விட்டு வேகவைத்தால், பொங்கல் சுவையாக இருக்கும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கொத்தவரங்காயை சிறிது வதக்கிய பிறகு வேகவைத்தால், மென்மையாக வெந்து விடும்.
சமையலறையில் பச்சை மிளகாயை நறுக்கும்போது கைகள் எரியாமல் இருக்க, கைகளில் ஒரு பிளாஸ்டிக் கவரை மாட்டிக்கொண்டு அரியலாம்.
மிக்ஸியின் பிளேடு முனை மழுங்கி இருந்தால், கல் உப்பு சிறிதளவு எடுத்துப்போட்டு மிக்ஸியை ஓட விடவும். பிறகு கல் உப்பை எடுத்துவிடவும். மிக்ஸி பிளேடு கூராகி விடும்.
காய்கறிகளை தண்ணீர் ஊற்றி வேகவைப்பதற்கு பதில் நீராவியில் வேகவைக்கவும். ஸ்டீமில் வைத்து வேகவைக்கும்போது சத்துக்கள் குறையாமல் இருக்கும்.
குழம்பில் உப்பு அதிகமாகிவிட்டால், பொட்டுக்கடலையை லேசாக வறுத்துப் பொடித்து குழம்பில் சேர்த்து கொதிக்க விட்டால் போதும். உப்பு மட்டுப்படும்.
சேனைக்கிழங்கு போன்ற அரிப்பு எடுக்கும் காய்களை நறுக்குவதற்கு முன் கையில் தேங்காய் எண்ணெய் தடவிக்கொண்டு நறுக்கினால் கை அரிக்காது.
சூப் நீர்த்துப் போனால், ஒரு உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்து சூப்பில் சேர்த்து லேசாக கொதிக்க வைக்கவும். சூப் கெட்டியாகிவிடும்.