ARTICLE AD BOX
விஜய்யே ஒரு பனையூர் பண்ணையாருதான்.. அரசியலுக்கு இது செட் ஆகாது.. ஓபனாக வெளுத்த பிரபலம்
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கியிருக்கும் விஜய் முழு நேர அரசியல்வாதியாக மாறியிருக்கிறார். நேற்றுகூட அக்கட்சியின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. இதில் 20 நிமிடங்கள்வரை பேசிய விஜய்; வழக்கம்போல் திமுகவையும், பாஜகவையும் தாக்கி பேசினார். அவரது பேச்சுக்கு வரவேற்பும், கிண்டலும் ஒருசேர கிடைத்திருக்கின்றன. இந்தச் சூழலில் பிரபல பத்திரிகையாளரான அந்தணன் விஜய்யின் பேச்சு குறித்து தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார்.
விஜய் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டதைபோல் அவர் அரசியலுக்கு வந்திருக்கிறார். தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை தொடங்கியிருக்கும் அவர் இன்னும் ஒரு படத்தில் மட்டுமே நடிக்கவிருக்கிறார். அந்தப் படத்துக்கு ஜன நாயகன் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. ஹெச். வினோத் இயக்கிவரும் அந்தப் படத்தின் ஷூட்டிங் விரைவில் முடிவடையவிருக்கிறது. இதற்கு பிறகு விஜய்யை பெரிய திரையில் காண முடியாது; அரசியல் மேடைகளில் பார்க்கலாம்.

பிஸி விஜய்: ஒருபக்கம் தனது கடைசி பட ஷூட்டிங்; மறுபக்கம் அரசியல் மீட்டிங் என பிஸியாக இருக்கிறார். முதலில் மாநில மாநாடு, அடுத்ததாக புத்தக வெளியீட்டு விழா மற்றும் பரந்தூர் பயணம் என அரசியல் களத்தில் பம்பரமாக சுழல ஆரம்பித்திருக்கிறார். மாநாடு முதல் பரந்தூர் பயணம்வரை திமுகவை ஓபனாக விமர்சனம் செய்யும் விஜய்; பாஜகவையும் எதிர்த்துவருகிறார். ஆனால் திமுகவை எதிர்ப்பதில் இருக்கும் அவரது காத்திரம் பாஜகவிடம் இல்லை என்கிற பேச்சும் பலமாகவே எழ ஆரம்பித்திருக்கின்றன.
இரண்டாம் ஆண்டு தொடக்க விழா: சூழல் இப்படி இருக்க தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி இரண்டாவது ஆண்டு தொடக்க விழா நேற்று செங்கல்பட்டில் நடைபெற்றது. இதில் விஜய், பிரசாந்த் கிஷோர், புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரும்; கட்சியின் தொண்டர்களும் கலந்துகொண்டார்கள். விழா தொடங்குவதற்கு முன்னர் மும்மொழி கொள்கைக்கு எதிராக கையெழுத்து போட்டார் விஜய். அவரைத் தொடர்ந்து ஆனந்த், ஆதவ் உள்ளிட்டோரும் தங்களது கையெழுத்தை போட்டார்கள்.
நான் இங்கு ரவுடி பேபிதான்.. ஆனால் அங்கு அப்படி இல்லை.. சாய் பல்லவி ஓபனா சொல்லிட்டாங்களே
விஜய்யின் பேச்சி: விழாவில் பேசிய விஜய், "நிதி கொடுக்க வேண்டியது ஒன்றிய அரசின் கடமை; பெற வேண்டியது இவர்களின் உரிமை. ஆனால் அதை செய்யாமல் இரண்டு பேரும் ட்விட்டரில் ஹேஷ்டேக் போட்டு விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். இடையில் நம்ம பசங்க சென்று TVK fo TN என்று ஹேஷ்டேக் போட்டு சம்பவம் செய்துவிட்டு வந்தார்கள். முன்பெல்லாம் பண்ணையார்கள் பதவியில் இருந்தார்கள். இப்போது பதவியில் இருப்பவர்கள் பண்ணையார் ஆகிவிடுகிறார்கள்" என பல விஷயங்களை 20 நிமிடங்கள் பேசினார். வழக்கம்போல் இந்தப் பேச்சிலும் திமுகவையே அவர் மறைமுகமாக விமர்சனம் செய்தார்.
நான் யாருக்கும் துரோகம் செய்யவில்லை.. புறம் பேசாதீர்கள்.. திரிஷா ஓபன் டாக்
அவரது பேச்சுக்கு ஒருசேர ஆதரவும், கிண்டல்களும் எழ ஆரம்பித்தன. திமுகவினரும், பாஜகவினரும் ஹேஷ் டேக் போட்டு விளையாடுகிறார்கள் என்று விஜய் கூறுகிறார்; அதே விஜய்தான் தன்னுடைய கட்சி தொண்டர்களும் ஹேஷ் டேக் போட்டுவிட்டார்கள் என்று சொல்கிறார். இதிலேயே இவ்வளவு முரண் இருக்கிறதே; யார் அவருக்கு ஸ்க்ரிப்ட் எழுதிக்கொடுப்பது. முக்கியமாக பனையூரை விட்டு வெளியே வராதவர் எல்லாம் கள அரசியலை பேசுகிறாரே என்று கிண்டல்கள் முளைக்க ஆரம்பித்துள்ளன.
அந்தணன் பேட்டி: இந்நிலையில் விஜய்யின் பேச்சு குறித்து பிரபல பத்திரிகயாளர் அந்தணன் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேசுகையில், "விஜய்யின் பேச்சு நேற்று சுவாரஸ்யமாகத்தான் இருந்தது. ஆனால் திமுகவையோ, பாஜகவையோ அவர் நேரடியாக சொல்லவில்லை. அரசியலுக்கு இது செட் ஆகாது. விமர்சனம் செய்வது என்று முடிவு செய்துவிட்டால் ஓபனாக கட்சியின் பெயரை சொல்லித்தான் விமர்சிக்க வேண்டும். இவர் மேலோட்டமாகவும், மறைமுகமாகவும் விமர்சனம் செய்கிறார். முக்கியமாக பண்ணையார் என்று சொல்லியிருக்கிறார். இவரையே பலரும் பனையூர் பங்களாவின் பண்ணையார்த்தான் என்று கூறுகிறார்கள். எனவே விஜய் அதை தவிர்த்திருக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.