ARTICLE AD BOX
தவெக தலைவர் விஜய்க்கு சில தினங்களுக்கு முன்பு Y பிரிவு பாதுகாப்பை வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், தவெக இரண்டாம் ஆண்டு துவக்க விழா இன்று நடைபெற்ற நிலையில், அந்த நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்பதற்கு முன்னதாக, அவரது வீட்டில் மர்ம நபர் ஒருவர் காலணியை வீசியது பரபரப்பை கிளப்பியது. இதனால், விஜய்க்கு கொடுக்கப்பட்ட Y பிரிவு பாதுகாப்பின் தற்போதைய நிலை குறித்த கேள்வியும் எழுந்துள்ளது?
நடிகராக இருந்து அரசியலில் களமிறங்கிருக்கும் விஜய், அடுத்த ஒருசில மாதங்களில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டிருக்கிறார். இந்த நிலையில், அவரது பாதுகாப்பு, இருக்கும் அச்சுறுத்தல்களை கருத்தில்கொண்டு, உளவுத்துறை கொடுத்த அறிக்கையின் அடிப்படையில், விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பை வழங்கி உத்தரவிட்டிருந்தது மத்திய உள்துறை அமைச்சகம். இதன்படி 8 முதல் 11 பேர் கொண்ட துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் படையைச் சேர்ந்த கமாண்டோக்கள் சுழற்சி முறையில் விஜய்யின் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள்.
இந்த நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரி பகுதியில் இன்று நடைபெற்றது. இதற்காக, விஜய்யின் வருகையை எதிர்நோக்கி அவரது நீலாங்கரை இல்லத்தின் வெளியே ஏராளமான தவெக தொண்டர்கள் குவிந்திருந்தனர். அப்போது, யாரும் எதிர்பார்க்காத வகையில், கேரளாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் விஜய் வீட்டிற்குள் காலணியை தூக்கி வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனால், விஜய்க்கு கொடுக்கப்பட்ட Y பிரிவு பாதுகாப்பின் தற்போதைய நிலை குறித்த கேள்வியும் எழுந்துள்ளது. இது குறித்து அதிகாரிகளிடம் விசாரிக்கையில், Y பிரிவு பாதுகாப்பு அறிவிக்கப்பட்ட நிலையில், அது இன்னும் வழங்கப்படவில்லை என்று தெரியவந்துள்ளது.
மத்திய உள்துறை, Y பிரிவு பாதுகாப்பை கொடுத்திருந்தாலும், அதற்கான ரிவியூ மீட்டிங் இன்னும் தொடங்கப்படாமல் இருப்பதால் பாதுகாப்பு போலீசார் தற்போது வரை வழங்கப்படவில்லை. குறிப்பாக, மத்திய அரசின் ஆறு பாதுகாப்பு பிரிவுகளான SPG, Z Plus, Z, Y Plus, Y , X ஆகிய பிரிவு பாதுகாப்பு அறிவித்த பின்பு, மத்திய அரசின் Security Review Committee (SRC) ஆலோசனை கூட்டம் நடைபெறும். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எந்தெந்த மாநில அரசியல் தலைவர்கள் மற்றும் பிரமுகர்களுக்கு அச்சுறுத்தல் உள்ளதோ? அந்தந்த மாநில காவல்துறை டிஜிபி, உளவுத்துறை அதிகாரி, தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளோடு இந்த ஆலோசனைக் கூட்டம் நடக்கும். இந்த ஆலோசனைக் கூட்டத்தின் அடிப்படையில் தான் அந்தந்த பிரிவு வகைகளுக்கான பாதுகாப்பு வழங்கப்படும்.
தற்போது வரை மத்திய அரசின் செக்யூரிட்டி ரிவிவ் கமிட்டி (SRC) நடைபெறாததால் விஜய்க்கு வழங்க வேண்டிய பாதுகாப்பானது இன்னும் கிடைக்காமல் இருக்கிறது. குறிப்பாக, இது பாதுகாப்பு வழங்குவதில் சிக்கலோ? அல்லது காலதாமதமோ அல்ல. ஆவணங்கள் அடிப்படையில் இந்த ஆலோசனை கூட்டமானது நடைபெறும். இந்த செக்யூரிட்டி ரிவிவ் கமிட்டி அலோசனை கூட்டத்துக்கு பிறகே அவருக்கு வழங்கப்பட்ட Y பிரிவு பாதுகாப்பானது மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.