ARTICLE AD BOX
விஜய் மனசு இன்னும் கொஞ்சம் கூட மாறலங்க.. தாடி பாலாஜியைப் பார்த்ததும்.. நண்பேன்டா மொமண்ட்!
சென்னை: நடிகர் விஜய் நடத்தி வரும் அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது ஆண்டு தொடக்க விழா மற்றும் முதலாம் ஆண்டு நிறைவு விழா இன்று நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதும் உள்ள கட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டார்கள். மிகவும் பிரமாண்டமாக நடைபெற்ற இந்த விழாவில், தேர்தல் வியூக அமைப்பாளர் பிரஷாந்த் கிஷோர் கலந்து கொண்டார். இந்த விழாவின் முடிவில் சுவாரஸ்யமான சம்பவம் நடைபெற்றது.
நடிகர் விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி இரண்டாம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். மேலும் வரும் காலங்களில் முழு நேர அரசியலில் ஈடுபட போவதாகவும், அதனால் சினிமாவில் இருந்து முழுமையாக விலகுவதாகவும் அறிவித்தார். தற்போது அவர் நடித்து வரும் ஜன நாயகன் படம் தான் அவரது திரை வாழ்க்கையில் கடைசி படமாக உள்ளது. இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி முதலாம் ஆண்டு முடிவடைந்ததையடுத்து, அதன் முதலாம் ஆண்டு நிறைவு விழா பூஞ்சேரியில் நடைபெற்றது.

விஜய் கட்சி தொடங்கியதும், தன்னை இணைத்துக் கொண்ட திரைப்பிரபலங்களில் தாடி பாலாஜியும் ஒருவர். கட்சியின் முதல் மாநாட்டு பணிகள் செய்யத் தொடங்கியதில் இருந்து, கட்சியில் பல விஷயங்களை செய்து வருகிறார். இது மட்டும் இல்லாமல் செய்தியாளர்கள் சந்திப்பில் தவெக குறித்த விமர்சனங்களுக்கு தடாலடி பதில்களை எல்லாம் கொடுத்துள்ளார். விஜய்யின் முகத்தை தனது மார்பில் பச்சை குத்திக் கொண்டார். இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வேகமாக பரவியது.
தவெக: விசிகவில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா, தவெகவில் இணைந்ததும், இவர் தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் பகிர்ந்த மீம் வேகமாக பரவியது. அதாவது கட்சியில் இணைந்ததும் மாநில பொறுப்பு ஆதவ் அர்ஜுனாவுக்கு வழங்கப்பட்டது. ஆனால், தாடி பாலாஜிக்கு இதுவரை எந்த கட்சிப் பொறுப்பும் வழங்கப்படவில்லை. இப்படி இருக்கும்போது, இவருக்கு கட்சிப் பதவி வழங்காததால் தான் இப்படி ஒரு வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார் என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தது.

தாடி பாலாஜி: இப்படியான நிலையில், இன்று நடைபெற்ற கட்சி விழாவில் கலந்து கொண்ட விஜய், அங்கிருந்து கிளம்ப தனது வாகனத்தில் ஏறி விட்டார். அப்போது வாகனத்திற்கு வெளியே, விஜய்க்கு கொடுக்க ஏதோ ஒரு பொருளை கையில் வைத்துக் கொண்டு நின்று கொண்டு இருந்தார், தாடி பாலாஜி. அவரைப் பார்த்ததும், தனது வாகனத்தில் இருந்து இறங்கி வந்த விஜய், தாடி பாலாஜியுடன் பேசிவிட்டு, அவர் கொடுத்த பொருளையும் பெற்றுக் கொண்டார். மேலும் அவருடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.

நண்பேன்டா: இது தொடர்பான வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. வீடியோவைப் பார்த்த இணையவாசிகள் பலரும் விஜய் மனசு இன்னும் அப்படியேதான் இருக்கிறது. தனது நண்பர் தாடி பாலாஜியைப் பார்த்ததும் இறங்கி வந்து பேசியதைப் பார்த்தால் நண்பேன்டா மொமண்ட் போல் உள்ளது என கமெண்ட் அடித்து வருகிறார்கள்.
