ARTICLE AD BOX
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் மாவட்ட அளவிலான இளைஞர் பாராளுமன்ற பேச்சுத் திறன் போட்டிக்கான இணையவழி பதிவேற்றம் நடைபெற்று வருகிறது.
மத்திய அரசின் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சென்னை நாட்டு நலப்பணித் திட்ட மண்டல இயக்குனரகம், நேரு இளையோர் மையம், மற்றும் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் இணைந்து தேசிய இளைஞர் பாராளுமன்ற பேச்சுத் திறன் போட்டிகளை நடத்த உள்ளன.
பங்கேற்பாளர்கள் "வளர்ச்சி அடைந்த பாரதம்" என்ற தலைப்பில் "My Bharat" (https://mybharat.gov.in/) போர்ட்டலில் ஒரு நிமிட வீடியோ பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மாவட்ட அளவிலான போட்டிக்கான தலைப்பு – "ஒரு தேசம், ஒரு தேர்தல்: விக்சித் பாரதத்திற்கு வழி வகுத்தல்"
மாநில அளவிலான போட்டிக்கான தலைப்பு – "இந்திய அரசியலமைப்பின் 75 ஆண்டுகள்: உரிமைகள், கடமைகள் மற்றும் முன்னேற்றத்திற்கான பயணம்"
தேசிய அளவிலான போட்டிக்கான தலைப்பு – "ஒரு தேசம், ஒரு தேர்தல்: ஜனநாயகத்தை எளிமைப்படுத்துதல், முன்னேற்றத்தை பெருக்குதல், நிலைத்தன்மையை உறுதி செய்தல்"
போட்டிக்கான தேர்வு முறைகள்
மாவட்ட அளவில் சிறந்த 10 போட்டியாளர்கள் மாநில அளவிற்குத் தகுதி பெறுவர்.
மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் புது தில்லியில் நடைபெறும் விக்சித் பாரத் இளைஞர் நாடாளுமன்ற இறுதிப் போட்டியில் கலந்து கொள்ள அழைக்கப்படுவார்கள்.
மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கான போட்டிகளை நடத்த மதுரை அமெரிக்கன் கல்லூரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
பங்கேற்க விரும்பும் இளைஞர்கள் 2025 பிப்ரவரி 24ஆம் தேதி 18 வயது நிறைவு செய்து, 25 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மாணவர்கள், மாணவர்கள் அல்லாத இளைஞர்கள் அனைவரும் போட்டியில் கலந்து கொள்ளலாம்.
இணையவழி பதிவுக்கான கடைசி நாள்: 2025 மார்ச் 16 (ஞாயிற்றுக்கிழமை).
மதுரை அமெரிக்கன் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் ம. தவமணி கிறிஸ்டோபர் அறிவிப்பில், மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் பதிவு செய்து, மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று இந்திய நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற உள்ள இறுதிச் சுற்று விவாதத்தில் கலந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
இந்த போட்டிக்கான ஒருங்கிணைப்பாளர்களாக அமெரிக்கன் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர். செல்வன், மதுரை காமராசர் பல்கலைக்கழக ஒருங்கிணைப்பாளர் மு. பாண்டி, மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மண்டல இயக்குநர் சாமுவேல் செல்லையா ஆகியோர் செயல்படுகின்றனர்.
போட்டியில் பங்கேற்க விரும்பும் இளைஞர்கள் "My Bharat" (https://mybharat.gov.in/) இணையதளத்தில் பதிவு செய்யலாம்.