ARTICLE AD BOX
பல விளம்பரங்களைப் பார்க்கலாம், அதில், வீட்டிற்கு திடீரென விருந்தாளிகள் நிறையபேர் வருவதாகவும், அவர்களுக்கு டீ, காபி, உணவு ஏற்பாடுகளை உடனடியாக எப்படி தயாரித்துக் கொடுத்து நன்மதிப்பைப் பெறுவது என்பதற்காக, உடனடி சமையல் தீர்வுகளை வெளியிட்டு, அதற்கு, அவர்களது பொருட்களை வாங்குங்கள்; நிலைமையைச் சமாளியுங்கள் என்பதாகவும் இருக்கும்.
மொத்தத்தில் அந்த விளம்பர யுக்தி போலவே, விளம்பரப் பொருட்கள் போலவே, நம் அன்றாட வாழ்க்கையில் எதற்கும் தயார் நிலையில் இருக்க வேண்டியுள்ளது.
நம்மில் பெரும்பாலானோர் தினசரி, வார, மாதம் என வேலைக்குச் சென்று பணம் சம்பாதிப்பவர்களாகவே உள்ளோம். நமது வருவாய் என்ன என்பதை நாம் அறிவோம். சம்பாதித்து வரும் பணத்தை செலவழிக்கும் பொறுப்பில் உள்ளோரையே நாம் குடும்பத் தலைவராக எடுத்துக் கொள்ளலாம். குறிப்பிட்ட வருவாய் கைக்கு வருவதற்கு முன்பே அதனை எதெதற்கு செலவு செய்வது என ஒரு பட்டியல் மனதுக்குள் ஓடிக்கொண்டிருக்கும்.
உலகம் முழுமைக்குமே வருவாய்க்கு மேல்தான் செலவுகள் உள்ளன. அப்படி செலவு செய்யும் போது, யாரும், எதிர்பாராத செலவினம் எனும் ஒன்றிற்கு எந்தத் தொகையும் ஒதுக்குவது இல்லை. எதிர்பாராத செலவினம் என்று ஒன்று வந்தால், அவசரத்திற்கு, கடன் வாங்கித்தான் நிலைமையை சமாளிக்க வேண்டியுள்ளது. அப்படி அடிக்கடி குடும்பத்தில் எதிர்பாராத செலவினங்களுக்கு என்று அடிக்கடி கடன் வாங்கும் போது கடனாளியாகி வாழ்க்கையில் காகிதக் கப்பல் போல் செயலிழந்து விடுகிறோம். அதன் விளைவே திடீர் மரணங்கள். குடும்பத்தில் பொருளாதார நிலைமையை சமாளிக்க இயலாதோர் நிலை இவ்வாறு உள்ளது.
அது மட்டுமே நிலைமையைச் சமாளிப்பது எனும் பட்டியலில் வருவதில்லை. குடும்ப நிருவாகத்தில், அரசு நிருவாகத்தில், வேலை செய்வதில், வேளாண்மையில், பேசுவதில், தலைமை தாங்குவதில், நடைமுறை வாழ்க்கையில், உண்பதில், உறங்குவதில், சுற்றுவதில், அனுபவிப்பதில் என பலவற்றிலும் நிலைமையைச் சமாளிப்பது என்பது, சூழ்நிலையை நிர்வகிப்பதில் அடங்குகிறது.
எல்லா உயிரினங்களுமே நிலைமையைச் சமாளிக்கும் திறனை இயற்கையாக கொண்டுள்ளன. ஒற்றைத் திறனையே அவை சுற்றிச் சுற்றி வருவதில்லை. ஒன்றில்லையெனில் மற்றொன்று என வகைபடுத்தலில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. ஒன்றில்லையெனில் மற்றொன்று என்பதில் மன நிறைவு மாறுபட்டிருக்கலாம். ஆனால், சூழ்நிலையைச் சமாளிப்பது எனும் பொருளில் அவைகள் அடங்கி விடுகின்றன.
நிலைமையைச் சமாளிப்பது என்பது ஒரு கலை. அந்தக் கலையை கையாளும் திறனை நாம் ஒவ்வொருவரும் பெற்றிருந்தால், வாழ்க்கை நிம்மதியாகத் தடையின்றி நகரும். அந்தக் கலை கை கூடாதோர் நிலைமையைச் சமாளிக்கும் திறன் பெற்றோரைக் கூர்ந்து கவனித்து வளர்த்துக் கொள்ளலாம். நிலைமையை சமாளிக்க கற்றுக் கொள்வோம். நிலைமையைச் சமாளிக்கும் திறன் வளர்த்து வாழ்வோம்; வளம் பெறுவோம்.