ARTICLE AD BOX
மும்மொழி கொள்கை விவகாரத்தில் பாஜகவும் திமுகவும் விளையாட்டு காட்டுவதாக தவெக தலைவர் விஜய் விமர்சித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு விழா கொண்டாட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில் விஜய் பேசியதாவது:
“அரசியல் என்றாலே வேற லெவல்தான். இதில் மட்டும்தான் வித்தியாசமான ஒன்றைப் பார்க்கலாம். யார் யாரை எப்போது ஆதரிப்பார்கள் எப்போது எதிர்ப்பார்கள் என்று கணிக்கவே முடியாது. அரசியலில் நிரந்தர எதிரியும் நிரந்தர நண்பனும் இல்லை என்பார்கள்.
மக்களுக்கு மிகவும் பிடித்த ஒருவன் அரசியலுக்கு வருகிறார் என்றால், மக்கள் நிச்சயம் அவரை ஆதரிப்பார்கள். இது சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தும். இதனால், வருகிறவன் போகிறவன் எல்லாம் கட்சி ஆரம்பிக்கிறான் என பேசுவார்கள். இப்போது ஆட்சியில் உள்ளவர்கள் பேசுகின்றவர்கள் மாதிரி.
தவெகவின் மாவட்டச் செயலாளர்கள் இளைஞர்களாக இருப்பது பலருக்குப் பிடிக்கவில்லை. அண்ணா, எம்.ஜி.ஆர். கட்சியைத் தொடங்கியபோது, அவர்களின் பின்னால் நின்றவர்கள் இளையவர்கள். அதனால்தான், 1967, 1977 இல் நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்றார்கள். அதுதான் வரலாறு.
நாங்கள் மாற்றத்தை உருவாக்கப் போகிறோம். ஒருவர் கட்சி ஆரம்பித்தால் எதிர்ப்புகள் வரத்தான் செய்யும். நாங்கள் எதிர்ப்புகளை இடது கையில் கையாண்டு இருக்கிறோம்.
நம்முடைய கட்சி எளிய மக்களுக்கான கட்சி. நம் கட்சி பண்ணையார்களுக்கான கட்சி கிடையாது. முன்பெல்லாம் பண்ணையார்கள் தான் கட்சியில் இருப்பார்கள். இப்போது கொஞ்சம் உல்டாவாக பதவியில் இருப்பவர்கள் எல்லாம் பண்ணையார்களாகிவிடுகின்றனர். இவர்களுக்கு, நாட்டின் வளர்ச்சியைப் பற்றியோ... மக்களின் வளர்ச்சியைப் பற்றியோ கவலை இல்லை. பணம்... பணம் என்றுள்ள இந்த பண்ணையார்களை அரசியலை விட்டு அகற்றுவதுதான் நம்முடைய முதல் பணி.
விரைவில் பூத் கமிட்டி மாநாடு நடத்தப் போகிறோம். தமிழக வெற்றிக் கழகம் முதன்மை சக்தி என அனைவருக்கும் காட்டுவோம். புதிய பிரச்னை ஒன்று கிளப்பி விட்டிருக்கிறார்கள். மும்மொழிக் கொள்கை. இந்தத் திட்டத்தை இங்கே செயல்படுத்தவில்லை என்றால் மாநில அரசுக்கு நிதி தர மாட்டேன் எனக் கூறுகின்றனர். எல்.கே.ஜி. – யு.கே.ஜி. பசங்க சண்டை போட்டுக் கொள்வதுபோல் உள்ளது. கொடுப்பது அவர்களின் கடமை. வாங்க வேண்டியது இவர்களின் உரிமை. நம்ம பாசிசமும் பாயாசமும் பேசி வைத்துக் கொண்டு ஹேஷ் டேக் போட்டு விளையாடி கொண்டிருக்கின்றனர். அடித்துக் கொள்வது மாதிரி அடித்துக் கொள்வார்களாம்; இதை நாம் நம்ப வேண்டுமாம். ’வாட் ப்ரோ… இட்ஸ்வெறி ராங் ப்ரோ…’.
இவர்கள் செய்வது எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை என்று தெரியும். நாம் எல்லா மொழிகளையும் மதிப்போம். மாநில அரசின் மொழிக்கொள்கையை கல்விக் கொள்கையை கேள்விக்குறியாக்கி வேறு மொழியை வலுக்கட்டாயமாக அரசியல் ரீதியாகத் திணித்தால் எப்படி? இதை நாங்கள் உறுதியாக எதிர்ப்போம். ” எனத் தெரிவித்தார்.