ARTICLE AD BOX
வளர்ச்சியும் பெருசா இல்லை, முதலீட்டுக்கு காசும் வேணும்.. கூகுள் சத்தமில்லாமல் செய்த வேலை..
அமெரிக்காவை சேர்ந்த ஆல்பபெட் நிறுவனத்தின் துணை நிறுவனமான கூகுள் தனது கிளவுட் பிரிவில் பணியாளர்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எவ்வளவு பணியாளர்கள் நீக்கப்பட்டார்கள் என்பது குறித்த சரியான புள்ளிவிவரம் தெரியவில்லை. அதேசமயம், சில குழுக்களில் மட்டுமே ஆட்குறைப்பு நடந்துள்ளதாக என தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் கிளவுட் பிரிவின் விற்பனையில் பிரிவில் 100க்கும் குறைவானவர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டு இருக்கலாம் என தகவல்.
கூகுளின் கிளவுட் வணிகத்தில் மெதுவான வளர்ச்சி மற்றும் கூகுள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு பிரிவில் தராளமாக முதலீடு செய்ய வளங்களை ஏற்படுத்தும் நோக்கில் இந்த பணியாளர் நீக்கம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. பணியாளர் நீக்கம் வாயிலாக சேமிக்கும் பணத்தை செயற்கை நுண்ணறிவு பிரிவில் நிதி நெருக்கடி இன்றி முதலீடு செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல். இந்த மாத தொடக்கத்தில், ஆல்பபெட் நிறுவனம் அதன் கிளவுட் வணிகத்துககான ஆய்வாளர்களின் வருவாய் கணிப்புகளை தவற விட்டது. அதேவேளையில், அதன் 2025ம் ஆண்டுக்கான மூலதன செலவின வழிகாட்டுதல் எதிர்பார்ப்புகளை மீறியது.

கூகுள் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், எங்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளையும், வரவிருக்கும் குறிப்பிடத்தக்க வாய்ப்பையும் பூர்த்தி செய்ய நிறுவனம் தொடர்ந்து மாற்றங்களை செய்து வருகிறது. நிறுவனம் முழுவதும் குழுக்கள் செய்து வருவதைப் போல, எங்கள் வணிகத்துக்கு முக்கியமான பகுதிகளில் தொடர்ந்து முதலீடு செய்வதற்கும் எங்கள் நீண்ட கால வெற்றியை உறுதி செய்வதற்கும் நாங்கள் மாற்றங்களை செய்கிறோம்.
கூகுள் நிறுவனம் கடந்த ஜனவரியில், ஆண்ட்ராய்டு, பிக்சல், குரோம் மற்றும் நெஸ்ட் போன்ற முக்கிய தயாரிப்புகளுக்கு பொறுப்பான தனது ப்ளாட்ஃபார்ம்ஸ் மற்றும் சாதனங்கள் பிரிவில் உள்ள அமெரிக்காவை சேர்ந்த பணியாளர்களுக்கான விருப்ப வெளியேறும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதன் வாயிலாக கொஞ்சம் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பியது. தற்போது அதனை தொடர்ந்து இப்போது ஆட்குறைப்பு நடவடிக்கையை கூகுள் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. கூகுளின் ஆட்குறைப்பு நடவடிக்கை எதிர்காலத்தில் பெரிய அளவில் இருக்குமோ என்ற அச்சம் அந்நிறுவன பணியாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
Story written by: Subramanian