வளர்ச்சிப் பாதையில் வடகிழக்கு மாநிலங்கள்: அமித் ஷா

14 hours ago
ARTICLE AD BOX

கிளர்ச்சி, வன்முறை போன்ற பிரச்னைகளில் இருந்து விடுவிக்கப்பட்டு, வடகிழக்கு மாநிலங்கள் வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லப்பட்டுள்ளதாக மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

அஸ்ஸாம் மாநிலத்தின் கோக்ராஜர் பகுதியில் அனைத்து போடோ மாணவர் சங்கத்தின் (ஏபிஎஸ்யூ) 57-ஆம் ஆண்டு மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டார்.

போடோ மாணவர் சங்க நிகழ்ச்சியில் பாரம்பரிய இசை வாத்தியத்துடன் அமித் ஷா

இந்த நிகழ்ச்சியில், அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வ சர்மா, சட்டப் பேரவைத் தலைவர் பிஸ்வஜித் டைமரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில் மாணவர் முன்பு அமைச்சர் அமித் ஷா பேசியதாவது, மாநிலத்தில் அமைதி, வளர்ச்சி, உற்சாகத்தை ஏற்படுத்துவதில் போடோ மாணவர் சங்கம் குறிப்பிடத்தக்க பங்காற்றுகிறது.

தில்லியில் உள்ள முக்கிய சாலைக்கு போடோ மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவரும் சமூக ஆர்வலருமான போடோபா உபேந்திர நாத் பிரம்மா மார்க் என்று பெயரிட அரசு முடிவு செய்துள்ளது. ஏப்ரல் முதல் வாரத்தில் தில்லியில் உபேந்திர நாத் பிரம்மாவின் மார்பளவு சிலை திறக்கப்படும்.

போடோபா உபேந்திரநாத் பிரம்மாவின் ஒவ்வொரு கனவையும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசும், அஸ்ஸாம் அரசும் நனவாக்கும்.

2020 ஜனவரி 27 அன்று போடோலாந்து (அஸ்ஸாமில் அமைந்துள்ள சுய ஆட்சிப் பகுதி) பிராந்திய அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டபோது, எதிர்க்கட்சிகள் அதைக் கேலி செய்தன. ஆனால், இன்று மத்திய அரசும், அஸ்ஸாம் அரசும் இந்த ஒப்பந்தத்தில் 82 சதவீதததை நிறைவேற்றியுள்ளன.

போடோலாந்தின் மக்கள் தொகை 3.5 மில்லியன் மட்டுமே என்றாலும், இதன் வளர்ச்சிக்காக ரூ.1,500 கோடியை மத்திய அரசும் மாநில அரசும் ஒதுக்கியுள்ளன. முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில், போடோ மொழி அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டது.

இப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் சமூகத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளனர். நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், ஒட்டுமொத்த வடகிழக்கு மாநிலங்களும் கிளர்ச்சி, வன்முறை போன்ற பிரச்னைகளில் இருந்து விடுவிக்கப்பட்டு, வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்லப்பட்டுள்ளது என அமித் ஷா பேசினார்.

Read Entire Article