ARTICLE AD BOX
மும்பை: இந்திய அணி வீரர்கள் ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் அடுத்த ஒரு சில வாரங்களில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளனர். அது குறித்து முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தென் துருவத்திலிருந்து வட துருவத்திற்கு இந்திய வீரர்கள் உடனடியாக மாற வேண்டும். அதாவது, ஐபிஎல் தொடரில் விளையாடிவிட்டு அடுத்து உடனடியாக டெஸ்ட் தொடருக்கு அவர்கள் தயாராக வேண்டும் என்பதை சுட்டி காட்டி இருக்கிறார்.

ஜடேஜாவால் சரியாக விக்கெட் வீழ்த்த முடியாது என்பதாலும், இங்கிலாந்து வீரர்கள் எப்போதும் மிஸ்டரி ஸ்பின்னர்களுக்கு எதிராக சரியாக விளையாட மாட்டார்கள் என்பதாலும் வருண் சக்கரவர்த்தியை அழைத்து செல்ல வேண்டும் என அதற்கான காரணத்தை விவரித்து இருக்கிறார். ஆனால் இந்திய அணி அதை செய்யாது எனவும் நவ்ஜோத் சிங் சித்து கூறி இருக்கிறார்.
இது பற்றி நவ்ஜோத் சிங் சித்து பேசியதாவது: "நாம் இங்கிலாந்து டெஸ்ட் தொடரை பற்றி கவலைப்பட வேண்டிய விஷயம், அந்தத் தொடர் ஐபிஎல்-க்கு அடுத்து வருவது தான். ஐபிஎல் தொடரில் எந்த ஒரு வீரரும் போட்டிகளில் விளையாடாமல் ஓய்வெடுக்க வேண்டும் என நினைக்க மாட்டார்கள்."
"அனைத்து வீரர்களும் ஐபிஎல் தொடரில் முழுவதுமாக விளையாடுவார்கள். அடுத்து உடனடியாக இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் போட்டி சூழ்நிலைகளுக்கு ஏற்ப அவர்கள் தயாராக வேண்டும். அதற்கு தென் துருவத்திலிருந்து, வட துருவத்துக்கு அவர்கள் மாற வேண்டும். அது முற்றிலும் வேறு, வேறானதாக இருக்கும்."
"மேலும் கடந்த முறை இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 4 அன்று தொடங்கியது. ஆனால், இந்த முறை ஆகஸ்ட் 2 அன்று அந்த தொடர் முடிவடைகிறது. அனைத்து போட்டிகளும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெற உள்ளன. அப்போது இங்கிலாந்தில் புற்கள் அதிகம் இருக்கும், ஈரப்பதம் அதிகமாக இருக்கும், அதனால் காற்று பலமானதாக இருக்கும். அப்போது பந்தில் அதிக நகர்வு இருக்கும்."
"இந்திய அணியின் மிகப்பெரிய பிரச்சனையே மிடில் ஆர்டர் தான். நமது ஒரு நாள் அணி மற்றும் டி20 அணியை போல டெஸ்ட் அணியில் அதிக ஆல்ரவுண்டர்கள் இடம் பெறவில்லை. ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா மற்றும் அக்சர் படேல் என வரிசையாக ஆல் ரவுண்டர்கள் இடம் பெறவில்லை. இந்த மூவரில் ஜடேஜா மட்டுமே டெஸ்ட் அணியில் இருப்பார். அவரது ஆட்டமும் குறிப்பிட்ட அளவில் தான் இருக்கும்."
என்னை நாடு திரும்ப கூடாது என்று மிரட்டினார்கள்.. தமிழக கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி புகார்
"ஜடேஜா ஒவ்வொரு இன்னிங்ஸிலும் நான்கு அல்லது ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்துவாரா? இல்லை. எனவே, நாம் மிஸ்டரி ஸ்பின்னரை உடன் அழைத்துச் செல்ல வேண்டும். அதுதான் இங்கிலாந்து அணியின் பலவீனம். ஆனால், இந்தியா வருண் சக்கரவர்த்தியை அதிகம் கிரிக்கெட் ஆட வைக்க மாட்டார்கள். அது அவரது நுட்பத்தை வெளி உலகுக்கு எடுத்துக்காட்டி விடும். எனவே, அவரை டெஸ்ட் போட்டிகளில் ஆட வைக்க மாட்டார்கள்" என்றார் நவஜோத் சிங் சித்து.