வரி தரமுடியாது எனச் சொல்ல ஒரு நொடி ஆகுமா?- ஸ்டாலின் பேசியது என்ன?

3 days ago
ARTICLE AD BOX

தமிழ்நாட்டிலிருந்து மத்திய அரசு வாங்கிக்கொண்டிருக்கும் வரியைத் தரமாட்டோம் என்று சொல்ல எங்களுக்கு ஒரு நொடி போதும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடியாகப் பேசியது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

கடலூர் மஞ்சக்குப்பத்தில் நடைபெற்ற அரசு விழாவில் அவர் நேற்று பேசியது:

“ இந்தியாவுக்கே முன்மாதிரியான அரசு நம்முடைய திராவிட மாடல் அரசு! நான் இன்னும்கூட சொல்கிறேன்.  சவாலாகவே சொல்கிறேன்.  இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலாவது இப்படி ஒவ்வொருவருக்கும் பார்த்துப் பார்த்து செய்யும் அரசு இருக்கிறதா?

ஒரு மாநிலம் வளர்கிறது என்றால், அந்த மாநிலத்தை உள்ளடக்கி ஆளக்கூடிய ஒன்றிய அரசு மகிழ்ச்சிதான் அடையவேண்டும். அதுதான் உண்மையான கூட்டாட்சித் தத்துவம்! மாநிலங்கள் வளர்ந்தால் அதன் மூலமாக நாடும் வளரும். மாநிலத்தின் வளர்ச்சியால் நாடுதான் பயன் பெறும், நாடுதான் பலம் பெறும். ஆனால், இன்றைக்கு ஒன்றியத்தை ஆளக் கூடிய அரசு மாநிலங்களின் வளர்ச்சியைப் பார்த்து பொறாமைப்படும் அரசாக இருக்கிறது. மாநில வளர்ச்சியைத் தடுக்கும் அரசாக இருக்கிறது. ஜி.எஸ்.டி. மூலமாக நம்முடைய மாநிலத்தின் நிதி வளத்தை மொத்தமாக கபளீகரம் செய்தார்கள். மாநிலங்களுக்கு தர வேண்டிய நிதியை தர மறுக்கிறார்கள். மாநிலங்களுக்கு புதிய திட்டங்களை அறிவிக்க மறுக்கிறார்கள். ஒன்றிய அரசும் மாநில அரசும் இணைந்து நிறைவேற்ற வேண்டிய திட்டங்களுக்கான தொகையைக் கூட தர மறுக்கிறார்கள்.

இது எல்லாவற்றையும் சகித்துக்கொண்டும், சமாளித்துக்கொண்டும் தான் நாம் திட்டங்களைத் தீட்டி வருகிறோம். அதையும் தாண்டி வளர்கிறோம். அதுதான் அவர்கள் கண்ணை உறுத்திக்கொண்டே இருக்கிறது. அதை தடுக்க பல்வேறு தடைகளை உருவாக்குகிறார்கள். புதிய புதிய சட்டங்கள் மூலமாக சங்கடங்களை உருவாக்குகிறார்கள். தேசியக் கல்விக் கொள்கை என்னும் பெயரில் நம்முடைய பிள்ளைகள் படித்து முன்னேறுவதை தடுக்கப் பார்க்கிறார்கள்.

படிக்கக் கூடாது, பள்ளிக் கூடங்களை மிதிக்கக் கூடாது, வேலைகளை அடையக் கூடாது என்று 100 ஆண்டுகளுக்கு முன்பு வரைக்கும் நம்முடைய மக்கள் ஒடுக்கப்பட்டார்கள். வகுப்புவாரி உரிமை என்று சொல்லும் சமூகநீதியை உருவாக்கி பட்டியலின மக்களுக்கும், பழங்குடி மக்களுக்கும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும், கல்விச் சாலையின் கதவைத் திறந்து வைத்தோம். இன்றைக்கு இவ்வளவு பேர் படிக்கவும் வேலைகளைப் பெறவும் அதுதான் அடித்தளம் அமைத்தது. அந்த சமூகநீதியை சிதைக்கத்தான் தேசியக் கல்விக் கொள்கை கொண்டு வரப்படுகிறது. இதன் மூலமாக, தமிழ்நாட்டு பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் முன்னேற்றம் தடுக்கப்படும். மீண்டும் கல்விச் சாலைகளுக்குள் வரவிடாமல் தடுக்கப்படுவார்கள்.

இது போன்ற ஏராளமான தடைகளை உருவாக்கி, தமிழ்நாட்டின் முன்னேற்றத்தை தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்தை தடுக்கப் பார்க்கிறார்கள். தமிழ்நாட்டு மாணவர்களுக்காகவும் ஆசிரியர்களின் சம்பளத்திற்காகவும் ஆண்டுதோறும் வழங்கப்படும் 2 ஆயிரத்து 152 கோடி ரூபாய் நிதியை உடனடியாக விடுவிக்கவேண்டும் என்று நேற்றையதினம், நம்முடைய மாண்புமிகு இந்திய நாட்டின் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு,  தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில் நான் கடிதம் எழுதினேன்.

அதற்கு இன்றைக்கு ஒன்றிய கல்வி அமைச்சர் திரு.தர்மேந்திர பிரதான் அவர்கள் பதில் கடிதம் அனுப்பி இருக்கிறார். அதில், கல்வியில் அரசியல் செய்ய வேண்டாம் என்று அறிவுரை சொல்கிறார். நான் கேட்கிறேன். கல்வியில் அரசியல் செய்வது நீங்களா? நாங்களா?

மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான், கல்வித் துறைக்கு தர வேண்டிய நிதியைத் தருவோம் என்று ‘Blackmail’ செய்வதற்கு பெயர் என்ன? அரசியல் இல்லையா?

கல்விக் கொள்கை என்ற பெயரில் இந்தியைத் திணிப்பது அரசியல் இல்லையா?

பல மொழிகள் கொண்ட இந்திய நாட்டை – ஒரு மொழி நாடாக மாற்றுவது அரசியல் இல்லையா?

பல்வேறு மொழி பேசும் இன மக்கள் வாழும் நாட்டை, ஒற்றை இன நாடாக மாற்ற நினைப்பது அரசியல் இல்லையா?

ஒரு திட்டத்திற்கான நிதியை, மற்றொரு திட்டத்தை ஏற்றுக்கொள்வதற்கான நிபந்தனையாக மாற்றுவது அரசியல் இல்லையா?

நீங்கள் செய்வது அரசியலா? இல்லையா? என்பதை நீங்கள் சிந்தித்துப்பார்க்க வேண்டும். அரசியல் செய்வது நீங்களா? நாங்களா?

மக்கள் நலத்திட்டங்களுக்காக அரசின் நிதியை செலவு செய்பவர்கள் நாங்கள்.  அரசின் நிதியை மதவெறிக்காகவும் இந்தி – சமஸ்கிருத திணிப்புக்காகவும் செலவு செய்பவர்கள் நீங்கள்.

பி.எம்.ஸ்ரீ திட்டத்தை ஏற்காததால் தமிழ்நாடு 5,000 கோடி ரூபாய் இழக்கிறது என்று சொல்லும் ஒன்றிய அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான் அவர்களே...

தமிழ்நாட்டிலிருந்து நீங்கள் வாங்கிக்கொண்டு இருக்கும் வரியை தரமாட்டோம் என்று சொல்ல எங்களுக்கு ஒரு நொடி போதும்... மறந்துவிடாதீர்கள்! கொடுத்து பெறுவதுதான் கூட்டாட்சித் தத்துவம்! அதுதான் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை! அதைகூட புரிந்துக்கொள்ளாதவர்கள் ஒன்றியத்தை ஆள்வதுதான் இந்தியாவுக்கே மிகப்பெரிய சாபக்கேடு!

தேசியக் கல்விக் கொள்கை என்பதே, கல்வியை வளர்ப்பதற்காக கொண்டு வரப்படவில்லை. இந்தியை வளர்க்க கொண்டு வரப்பட்டிருக்கிறது! நேரடியாக திணித்தால் எதிர்ப்பார்கள் என்று, கல்விக் கொள்கை மூலமாக முலாம் பூசி திணிக்கிறார்கள்! தாய் மொழியை வளர்க்கப் போவதாக ஒன்றிய அமைச்சர் சொல்கிறார். 

தர்மேந்திர பிரதான் அவர்களே... தாய்மொழித் தமிழை வளர்க்க எங்களுக்குத் தெரியும். இந்தி மொழியால் தங்களின் தாய்மொழிகளை தொலைத்துவிட்டு நிற்பவர்களிடம் கேளுங்கள். உங்கள் சதி திட்டத்தின் ஆபத்து புரியும்! நீங்கள் வந்துதான் வளர்ப்பீர்கள் என்று தமிழ் உங்களிடம் கையேந்தி நிற்கவில்லை!

ஒன்றிய அரசுக்கு நான் கடுமையான எச்சரிக்கையை விடுக்கிறேன். தேன் கூட்டில் கல் எறியாதீர்கள்! தமிழர்களின் தனித்துவமான குணத்தை மறுபடியும் பார்க்கவேண்டும் என்று ஆசைப்படாதீர்கள்!” என்று முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார். 

Read Entire Article