நம் நாட்டில் பல பெரிய வணிக குழுமங்களின் தலைவர்கள் தங்களது வாரிசுகளை தலைமை பொறுப்புக்கு கொண்டு வர தொடங்கி விட்டனர். உதாரணமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, தனது 3 வாரிசுகளையும் நிறுவனங்களின் முக்கிய பொறுப்புகளில் அமர்த்தி விட்டார். அந்த வகையில் டஃபே நிறுவனத்திலும் அடுத்த தலைமுறை தலைமை பொறுப்புக்கு வந்துள்ளது.
டிராக்டர்ஸ் அண்ட் ஃபார்ம் எக்யூப்மென்ட் லிமிடெட் (டஃபே) இந்தியாவின் முன்னணி விவசாய கருவிகள் உற்பத்தி நிறுவனமாகும். மேலும் சர்வதேச அளவில் மிகப்பெரிய டிராக்டர் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.

டஃபே நிறுவனத்தின் இயக்குனரான லட்சுமி வேணு, தற்போது நிறுவனத்தின் துணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். டஃபே நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மல்லிகா ஸ்ரீனிவாசன் மற்றும் டிவிஎஸ் மோட்டார் தலைவர் எமரிட்டஸ் வேணு ஸ்ரீனிவாசனின் மகள்தான் லட்சுமி வேணு. டஃபேவின் துணை தலைவராக லட்சுமி வேணு உயர்த்தப்பட்டது, டஃபே மற்றும் டிவிஎஸ் இரண்டையும் வழிநடத்தும் நிறுவனர்-குடும்பத்தின் அடுத்த தலைமுறையுடன் தொடர்புடையது. லட்சுமி வேணு டிவிஎஸ் குழு நிறுவனமான சுந்தரம் கிளேட்டனில் நிர்வாக இயக்குனராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
டஃபே நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மல்லிகா ஸ்ரீனிவாசன் கூறுகையில், லட்சுமி வேணு எங்கள் தலைமை குழுவின் முக்கிய உறுப்பினராகவும், டஃபேவின் வாரிய உறுப்பினராகவும் இருந்து வருகிறார். எதிர்காலத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்தும் அவரது தலைமைத்துவ பாணியுடன், உலகத்தை வளர்ப்பது என்ற தனது தொலைநோக்கு பார்வையை நோக்கிய டஃபேவின் கூட்டு, மதிப்பு அடிப்படையிலான அணுகுமுறையை அவர் பயனடைய செய்வார் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்தார்.
நிறுவனத்தின் துணை தலைவராக நியமனம் செய்யப்பட்டது குறித்து லட்சுமி வேணு கூறுகையில், எங்கள் அமைப்பை வலுப்படுத்தவும், எங்கள் மூலோபாய இலக்குகளை அடைய தொடர்ந்து வெற்றியை நோக்கி செல்லவும் டஃபே மற்றும் எய்ஷர் டிராக்டர்களின் வாரியம் மற்றும் குழுக்களுடன் நெருக்கமாக பணியாற்ற நான் எதிர்நோக்குகிறேன் என்று தெரிவித்தார். லட்சுமி வேணுவின் நியமனம், டஃபே மற்றும் டிவிஎஸ் ஹோல்டிங்ஸின் உரிமை மற்றும் நிர்வாகம் குடும்ப உறுப்பினர்களிடையே சீரமைக்கப்படுவதைக் குறிக்கிறது.
2024 மார்ச் மாதத்தில் வேணு ஸ்ரீனிவாசன், தனது குடும்பத்தினர் தங்களுக்குள் போட்டியை தவிர்ப்பதற்காக ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டதாக அறிவித்தார். மற்றவற்றுடன், தானும், தன்னால் கட்டுப்படுத்தப்படுபவர்களும் சில வணிகங்கள் தொடர்பான சில டிரேட்மார்க்களை பயன்படுத்தக்கூடாது என்பதை சுதர்சனும் ஒப்புக்கொண்டார். லட்சுமி வேணுவின் சகோதரர் சுதர்சன் வேணு, டிவிஎஸ் ஹோல்டிங்ஸின் நிர்வாக இயக்குனராகவும், டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளார். டிவிஎஸ் குழுமத்தின் வங்கி அல்லாத நிதி சேவை நிறுவனமான டிவிஎஸ் கிரெடிட் சர்வீசஸின் தலைவராகவும் உள்ளார்.