ARTICLE AD BOX
இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர் சுஜாதா. அவர் பகுதி நேர எழுத்தாளர். பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் என்ற பொதுத் துறை நிறுவனத்தில் உயர் பதவியில் இருந்து கொண்டே, எழுத்துப் பணியையும் மேற் கொண்டார். எழுத்துலகில் தனக்கென்று உயரிய இடம் பிடித்த சுஜாதா, தன்னுடைய எழுத்திற்கு முன்மாதிரியாகக் குறிப்பிட்டது அமரர் கல்கி மற்றும் தேவன்.
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பட்டப் படிப்பு முடித்து, சென்னை மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் மின்னணு துறையில் பட்டம் பெற்றார். மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை உருவாக்கியதில் பெரும் பங்கு சுஜாதாவைச் சேர்ந்தது. இந்த கண்டு பிடிப்பிற்காக பிரசித்தி பெற்ற 'வாஸ்விக்' விருது பெற்றார்.
சுஜாதாவின் எழுத்து நடை அலாதியானது. புது வசந்தம் போன்றது என்று சொல்லலாம். தமிழ் எழுத்து நடையில் இளமையும், புதுமையும் கலந்த நடையைப் புகுத்தியவர். அவருடைய முதல் நாவல் 'நைலான் கயிறு’, குமுதத்தில் வெளிவந்தது. ஆங்கிலம் கலந்த மணிப்பிரவாள நடை... ஒரு கால கட்டத்தில், அவருடைய தொடர் கதைகளுக்காவே பத்திரிகைகள் விற்பனை அதிகரித்தன.
புனைவு கதைகளில் குற்றம் சார்ந்த கதைகளுக்கு ஒரு தனி இடம் உண்டு. அதுவும், கொலை, மர்மம் என்றால் படிப்பதற்கு ஆர்வம் அதிகரிக்கும். கதையைப் படிக்கும் போதே நாமும் ஒரு துப்பறிபவர் போல யார் பண்ணியிருப்பார்கள் என்று கண்டறிய முயற்சி செய்வோம். ஒரு நல்ல எழுத்தாளர், படிப்பவரின் ஆர்வத்தைத் தூண்டி, முடிவில் இவர் தான் குற்றவாளி என்று ஆதாரங்களுடன் விளக்குவதில் அந்தக் கதையின் மதிப்பு கூடுகிறது.
ஒரு கதையை படிக்கத் தூண்டுவதில் கதையின் தலைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. சுஜாதா நாவல்களில் கதைத் தலைப்பே வசீகரமாக இருக்கும். உதாரணத்திற்கு குமுதத்தில் அவர் எழுதிய ஒரு கதையின் தலைப்பு 'கொலையுதிர் காலம்'. கதைத் தலைப்பே, இலைகள் உதிர்வது போல கொலைகள் நிறைய நடக்கப் போகின்றன என்று நம்மை அச்சுறுத்துகிறது. இந்தக் கதையின் முதலிலிருந்து கடைசி வரை, படிப்பவர்கள் மனதில் ஏற்படும் சந்தேகம், நடப்பது அமானுஷ்யமா அல்லது விஞ்ஞானத்தின் துணை கொண்டு, பின்னிருந்து ஒரு சூத்திரதாரி பேய் வடிவம் அமைத்து இயக்குகிறானா? வெட்ட வெளியில் இதைச் செய்ய முடியுமா? 1980 ஆம் வருடம் வந்த இந்தக் கதையில் ஆசிரியர் டெலிகினஸிஸ், ஹாலோகிராம் என்ற மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பத்தைக் குறிப்பிடுகிறார். ஒரு நல்ல மர்மக் கதையைக் கொடுத்த சுஜாதா, கொலைகளுக்குக் காரணம் பேயா அல்லது மனிதனா என்பதை நம் ஊகத்திற்கு விட்டு விட்டார்.
சுஜாதாவை ஒரு பேட்டியில் கேட்டார்கள்... “உங்களுக்கு பேய், பிசாசு நம்பிக்கை உண்டா?”... அவருடைய பதில் - “நண்பர்களுடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது, நம்பிக்கையோ, பயமோ இல்லை. இரவில் தனிமையில் அமர்ந்து எழுதிக் கொண்டிருக்கும் போது இரண்டும் உண்டு.”
ஆர்தர் கானன் டாயில் கதைகளில் துப்பறிபவர் ஷெர்லக் ஹோம்ஸ் மற்றும் உதவியாளர் வாட்சன். அகதாகிரிஸ்டி கதைகளில் துப்பறிபவர் ஒருவரே ஹெர்குல் பாய்ராட் அல்லது மிஸ். மேரி மார்ப்ல். மேரி ஹிக்கின்ஸ் க்ளார்க் கதைகளில் பாதிக்கப்பட்ட குடும்பத்துப் பெண் துப்பறிய முயற்சி செய்வார்.
தமிழ் வாணன் கதைகளில் சங்கர்லால் துப்பறிபவர். சுஜாதா கதைகளில் லாயர் கணேஷ் மற்றும் அவர் உதவியாளர் வசந்த். சுஜாதா கதைகளில் கணேஷ் தீவிரமாகத் துப்பு துலக்க, தீவிரத்தைத் தணிக்க நடு நடுவே வசந்த்தின் கடி ஜோக்ஸ், வயது வந்தவர் ஜோக்ஸ், அழகானப் பெண்ணைப் பார்த்து ஜொள்ளு விடுதல் எல்லாம் உண்டு.
சிறுகதைகள், குறு நாவல்கள், மர்ம கதைகள், அறிவியல் புனைவு கதைகள் என்று எதையும் விட்டு வைக்கவில்லை சுஜாதா. 'என் இனிய இயந்திரா' அறிவியல் புனைவுக் கதைகளில் நன்றாக வடிவமைக்கப்பட்ட கதை என்று சொல்லலாம்.
கதைகள், நாவல்கள் தவிர சுஜாதா பல கட்டுரைகள் எழுதியிருக்கிறார். குறிப்பிடத்தக்க கட்டுரைகள் தலைமைச் செயலகம், கணிப்பொறியின் கதை, சிலிக்கன் சில்லுப் புரட்சி, அடுத்த நூற்றாண்டு, என்று பல அறிவியல் நூல்கள். அறிவியலை எளிய தமிழில் பரப்பியதற்காக என்.ஸி.என்.டி.ஸி விருதை மத்திய அரசு அளித்தது. சுஜாதாவின் 'ஆழ்வார்கள், ஒரு எளிய அறிமுகம்' ஆழ்வார்கள் பற்றிய குறிப்புகள் கொண்ட அருமையான நூல். இதில் மிகவும் ரசித்தது, ஆழ்வார்களின் நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்களை எடுத்துக் காட்டி அதற்கு அருமையான எளிய விளக்கங்கள் அளித்திருக்கும் பாங்கு. சுஜாதா நாடகங்கள் மற்றும் சினிமா துறையையும் விட்டு வைக்கவில்லை. அங்கும் தன்னுடைய முத்திரையை பதித்துள்ளார் சுஜாதா.
இவரை சகல கலா வல்லவர் என்று சொல்வதில் தவறில்லை அல்லவா?