ARTICLE AD BOX
சென்னை,
கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கும் எஸ்.ஏ.பத்மநாபன், கிரைம் திரில்லர் ஜானரில் நகைச்சுவை பாணியில் 'லெக் பீஸ்' படத்தை உருவாக்கியுள்ளார். இப்படத்தை ஸ்ரீநாத் இயக்கி நடித்துள்ளார். இதில் யோகி பாபு, வி.டி.வி கணேஷ் , கருணாகரன், ரமேஷ் திலக், ரெடின் ஆகியோர் முக்கிய முன்னணி வேடங்களில் நடித்து உள்ளனர்.
இந்த நிலையில், 'லெக் பீஸ்' படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.
சவுரி முடி வியாபாரி மணிகண்டன், கிளி ஜோதிடர் கருணாகரன், பல குரல் கலைஞரான ரமேஷ் திலக், பேய் விரட்டும் தொழில் செய்யும் ஸ்ரீநாத் ஆகியோர் போதிய வருமானம் இன்றி கஷ்டப்படுகின்றனர். முன்பின் தெரியாத இந்த நான்கு பேரும் ரோட்டில் கிடக்கும் ரூ. 2 ஆயிரத்தை எடுத்து டாஸ்மாக் பாருக்கு சென்று மது அருந்துகிறார்கள். அவர்கள் கொடுத்த ரூபாய் கள்ள நோட்டு என்பதை ஊழியர்கள் கண்டுபிடித்து பார் உரிமையாளர் நான்கடவுள் ராஜேந்திரனிடம் பிடித்துக் கொடுக்கின்றனர்.
அப்போது சில கொலைகள் நடந்து நான்குபேரும் பிரச்சினையில் சிக்குகின்றனர். அதில் இருந்து அவர்களால் தப்பிக்க முடிந்ததா? என்பது மீதி கதை.

கருணாகரன், ஸ்ரீநாத், மணிகண்டன், ரமேஷ் திலக் ஆகியோர் அவரவரின் தனித்துவமான பாணியில் சிரிக்க வைக்கும் வேலையை கச்சிதமாக செய்துள்ளனர். ரமேஷ் திலக்கின் பிளாஷ் பேக் காதல் உருக வைக்கிறது. மணிகண்டன் பெண்களிடம் நடத்தும் சில்மிஷங்கள் ரசனை. ஸ்ரீநாத் தங்கை பாசத்தில் நெகிழ வைக்கிறார்.
ரவி மரியா, நான் கடவுள் ராஜேந்திரன், மைம் கோபி, ஜான் விஜய் ஆகியோர் சிரிப்பு வில்லன்களுக்கான பங்களிப்பை கொடுத்துள்ளனர். மதுசூதனராவ் வில்லத்தனத்தில் மிரட்டுகிறார். போலீஸ் அதிகாரியாக வரும் சரவண சுப்பையா, மறைந்த நடிகர் மாரிமுத்து, வி.டி.வி. கணேஷ் ஆகியோரும் கவனிக்க வைக்கின்றனர். யோகிபாபு வழக்கமான பஞ்ச் வசனம் மூலம் சிரிக்க வைக்கிறார்.
சில வசனங்களில் இருக்கும் ஆபாசம் பலவீனம். மாசானியின் கேமரா காட்சிகளை வண்ணமயமாக படம்பிடித்துள்ளது. பிஜோர்ன் சுர்ராவின் பின்னணி இசை காட்சிகளோடு ஒன்ற வைக்கிறது. காதல், காமெடி, சென்டி மென்ட், பாலியல் அத்துமீறல்கள் போன்ற பல விஷயங்களை திரைக்கதையில் நேர்த்தியாக இணைத்து முழு நீள காமெடி படத்தை சுவாரஸ்யமாகவும் ரசிக்கும் வகையிலும் கொடுத்துள்ளார் இயக்குனர் ஸ்ரீநாத்.