ARTICLE AD BOX

image courtesy:twitter/@BCCI
துபாய்,
8 அணிகள் இடையிலான ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. இதில் வரும் 9-ம் தேதி நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. அரைஇறுதியில் வலுவான ஆஸ்திரேலியாவை பந்தாடிய இந்தியா கூடுதல் நம்பிக்கையுடன் களமிறங்குகிறது.
இருப்பினும் இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மாவின் பார்ம் கவலையளிப்பதாக உள்ளது. 4 ஆட்டங்களில் விளையாடி வெறும் 104 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். இன்னும் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. தனக்காக இல்லாமல் அணியின் நலனுக்காக அவர் ஆரம்பத்திலேயே அதிரடியாக விளையாட முயற்சிப்பதால் விரைவில் விக்கெட்டை பறிகொடுத்து வருகிறார்.
இந்நிலையில் அரைஇறுதி வெற்றிக்குப்பின் தலைமை பயிற்சியாளரான கம்பீர் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் ரோகித் சர்மா இன்னும் எவ்வளவு காலம் விளையாடுவார்? என்று நிரூபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த கம்பீர், "சாம்பியன்ஸ் இறுதிப்போட்டி வர உள்ளது. அதற்கு முன்பாக என்னால் என்ன சொல்ல முடியும்? உங்களுடைய கேப்டன் இது போன்ற வழியில் விளையாடினால் அது உங்களுடைய அணியும் பயமின்றி தைரியமாக விளையாட வேண்டும் என்ற அணுகுமுறையை பின்பற்றுவதற்கான நல்ல அறிகுறியாகும். நீங்கள் ரோகித்தை ரன்கள் வைத்து மதிப்பிடுகிறீர்கள்.
ஆனால் நாங்கள் அவர் ஏற்படுத்தும் தாக்கத்தைப் பார்க்கிறோம். அதுதான் வித்தியாசம். செய்தியாளர்களாக நீங்கள் சராசரி மற்றும் நம்பர்களை மட்டுமே பார்ப்பீர்கள். ஆனால் ஒரு பயிற்சியாளராக அணியாக நாங்கள் அதைப் பார்ப்பதில்லை. எங்களது கேப்டன் களத்தில் முதல் ஆளாக எங்களுக்கு கையை உயர்த்தினால் அதை விட எங்களுக்கு சிறந்த விஷயம் இருக்க முடியாது" என்று கூறினார்.