ARTICLE AD BOX

கராச்சி,
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதிக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. அதே வேளையில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் லீக் சுற்றோடு வெளியேறியுள்ளது. இதில் பரம எதிரிகளான இந்தியா - பாகிஸ்தான் மோதிய ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் நிர்ணயித்த 242 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 42.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 244 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கோலி 100 ரன்கள் அடித்தார். அவரே ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். சமீப காலமாக பார்மின்றி தவித்து வந்த அவர் இந்த முக்கியான போட்டியில் சதத்தை அடித்து தனது தரத்தை மீண்டும் நிரூபித்துள்ளார்.
இந்நிலையில் கால்பந்து ஜாம்பவான்கள் மெஸ்சி, ரொனால்டோ போல விராட் கோலி வயதைக் கடந்தும் அசத்துவதற்கு தேவையான வேலை நெறிமுறைகளை (ஒர்க் எதிக்ஸ்) கொண்டுள்ளதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது அமீர் பாராட்டியுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "ரொனால்டோவை மக்கள் ஏன் விரும்புகிறார்கள்? மெஸ்சியை ஏன் மக்கள் ரசிக்கிறார்கள்?. குறிப்பாக ரொனால்டோவை பற்றி பேசும் போது அவருடைய வாழ்க்கை முறையைப் பாருங்கள். வேலை நெறிமுறைகள், பிட்னஸ் போன்றவைகளைக் கொண்ட அவர் முழுமையான வீரர். அதே போல விராட் கோலியும் முழுமையான வீரர். அவர் ஏன் பலருக்கும் ரோல் மாடலாக இருக்கிறார்.
பாகிஸ்தானில் கூட அவர் பலருக்கும் ரோல் மாடலாக இருக்கிறார். இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அல்லது இங்கிலாந்து போன்ற பல்வேறு நாடுகளை கடந்து இந்த தலைமுறைக்கு விராட் கோலி உத்வேகமாக இருக்கிறார். கிரிக்கெட்டில் அசத்த விரும்பும் இளைஞர்கள் விராட் கோலியை பின்பற்ற வேண்டும். அவரைப் போன்ற வீரருக்கு வயது முக்கியமல்ல. பார்ம் அடிப்படையில் அவருடைய வேலை நெறிமுறைகள் மாறுவதில்லை.
இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு 90 நிமிடங்கள் முன்பாகவே அவர் மைதானத்திற்கு வந்து பயிற்சிகளை செய்தார். இன்னும் அவர் 1-2 வருடங்கள் மட்டுமே சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடக் கூடும். ஆனால் அவருடைய வேலை நெறிமுறைகள் எப்போதும் உயர்வாகவே இருக்கும். எனவே அவருடைய திறன் மற்றும் வேலை நெறிமுறைகளை சந்தேகப்பட வேண்டாம்" என்று கூறினார்.