ARTICLE AD BOX
சமீபத்தில் மராட்டிய மாநிலத்தில் உள்ள புல்தானா மாவட்டத்தை சேர்ந்த சில கிராம மக்களுக்கு திடீரென தலை முடி பிரச்னைகள் ஏற்பட்டு வழுக்கை ஏற்பட்டதாகவும் அதற்கு காரணம் அப்பகுதிகளில் உள்ள ரேஷன் கடையில் விற்பனை செய்யப்பட்ட கோதுமையில் இருந்த அதிக அளவு செலினியம் எனும் ஒரு கனிமமாகும் என்றும் செய்திகளில் அடிபட்டது. உண்மையில் செலினியம் அதிகமானால் முடி உதிருமா ? செலினியம் குறித்து இங்கு காண்போம்.
செலினியம் என்பது ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பு பாதுகாப்பு, தைராய்டு ஹார்மோன் வளர்சிதை மாற்றம் மற்றும் நோயெதிர்ப்பு செயல்பாடு உள்ளிட்ட பல்வேறு உடல் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு அத்தியாவசிய கனிமம் ஆகும். இது இயற்கையாகவே மண், நீர் மற்றும் சில உணவுகளில் காணப்படுகிறது.
செலினியம் செலினோபுரோட்டின்களின் ஒரு முக்கிய அங்கமாகும். இது ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து செல்களைப் பாதுகாக்க உதவுகிறது. புற்றுநோய் மற்றும் இருதய நோய் போன்ற நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கலாம்.
புற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகளில் செலினியத்தின் பங்கை பலர் ஆராய்ந்துள்ளனர். உதாரணமாக பெருங்குடல் புற்றுநோய்க்கு முன்னோடிகளான மேம்பட்ட பெருங்குடல் அடினோமாக்கள் மீண்டும் வருவதை செலினியம் குறைப்பதாகக் காட்டப்பட்டுள்ளது . கூடுதலாக கீமோதெரபிக்கு உட்படும் புற்றுநோய் நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், பக்க விளைவுகளைக் குறைக்கவும் உதவுகிறது .
செலினியம் அதன் நோயெதிர்ப்புத் திறன் பண்புகளுக்கு பெயர் பெற்றது. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. கீமோதெரபி போன்ற நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்தும் சிகிச்சைகளுக்கு உட்படும் நபர்களுக்கு இது மிகவும் நன்மை பயப்பதாக கூறப்படுகிறது.
நாள்பட்ட பாதிப்புகளான டைப் 2 நீரிழிவு மற்றும் இருதய நோய்கள் போன்ற நாள்பட்ட நிலைமைகளை நிர்வகிப்பதில் செலினியம் சப்ளிமெண்டேஷன் அதன் சாத்தியமான நன்மைகளுக்காக ஆராயப்பட்டுள்ளது. இருப்பினும், முடிவுகள் குழப்பம் தருபவையாக உள்ளன என்றும் அறியப்படுகிறது.
நன்மைகள் இருந்தாலும் அதிக அளவு செலினியம் நச்சுத்தன்மைக்கு வழிவகுக்கும். இரைப்பை குடல் தொந்தரவு, முடி உதிர்தல் மற்றும் நக மாற்றங்கள் போன்ற அறிகுறிகளால் வகைப்படுத்தப்படும். கடுமையான சந்தர்ப்பங்களில், இது கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தும் என்கின்றனர் மருத்துவர்கள்.
புரோஸ்டேட் புற்றுநோய் நோயாளிகளில் அதிக அளவு செலினியம் சப்ளிமெண்ட் குறித்த ஒரு ஆய்வில், அதிக அளவுகளில் செலினியம் தொடர்பான பக்க விளைவுகள் அதிகமாக இருப்பதாகக் கூறப்பட்டது.
எனவே சாத்தியமான பக்க விளைவுகள் மற்றும் நச்சுத்தன்மையைத் தவிர்க்க பரிந்துரைக்கப்பட்ட அளவுகளைக் கடைப்பிடிப்பது அவசியம். குறிப்பாக அதிக அளவுகளில் எடுக்கும் செலினியம் சப்ளிமெண்டேஷன்களின் நீண்டகால விளைவுகளை முழுமையாகப் புரிந்துகொள்ள, மேலும் ஆராய்ச்சி தேவை என்கிறது மருத்துவம்.
மேலே குறிப்பிட்டுள்ள செய்தி குறித்து, வளர்சிதை மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கும் செலினியம் மனிதர்களுக்கு மிகக் குறைந்த அளவில் தேவைப்படுவதாகவும் ஆனால் அது உணவு மூலம் மனித உடலில் பல மடங்கு அதிகரித்ததால் இந்த திடீர் வழுக்கை பிரச்சனை ஏற்பட்டதாகவும் ராய்காட் பவாஸ்கர் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மைய நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளது செலினியம் மீதான எச்சரிக்கையை நமக்குத் தருகிறது.