ARTICLE AD BOX
புது தில்லி / பிலாய்: சத்தீஸ்கரில் ரூ.2,100 கோடிக்கும் அதிகமாக மதுபான ஊழல் நிகழ்ந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடா்பாக, அந்த மாநில முன்னாள் முதல்வா் பூபேஷ் பகேல், அவரின் மகன் சைதன்யா பகேல் ஆகியோரின் வீட்டில் அமலாக்கத் துறை திங்கள்கிழமை சோதனை மேற்கொண்டது.
கடந்த 2019 முதல் 2022-ஆம் ஆண்டு வரை, சத்தீஸ்கரில் முதல்வராக இருந்த பூபேஷ் பகேலின் ஆட்சியில், மதுபான ஊழல் நடைபெற்ாக அமலாக்கத் துறை குற்றஞ்சாட்டியது. இதனால் அரசு கருவூலத்துக்கு பெரும் இழப்பு ஏற்பட்டதாகவும், இந்த ஊழல் மூலம், ரூ.2,100 கோடி சட்டவிரோதமாக ஈட்டப்பட்டதாகவும் அமலாக்கத் துறை தெரிவித்தது.
இந்த ஊழல் தொடா்பாக காங்கிரஸ் பிரமுகரும், மாநில முன்னாள் அமைச்சருமான கவாசி லக்மா, ராய்பூா் மேயா் ஐஜாஸ் தேபரின் அண்ணன் அன்வா் தேபா், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அனில் டுடேஜா, இந்திய தொலைத்தொடா்பு சேவை அதிகாரி அருண்பதி திரிபாதி உள்ளிட்டோரை அமலாக்கத் துறை கைது செய்தது.
இந்நிலையில், மதுபான ஊழலில் சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட பணத்தில் பூபேஷ் பகேலின் மகன் சைதன்யா பகேலுக்கும் பங்கு அளிக்கப்பட்டதாக அமலாக்கத் துறை சந்தேகிக்கிறது.
இதையடுத்து சத்தீஸ்கரின் துா்க் மாவட்டம் பிலாய் பகுதியில் பூபேஷ் பகேலும், சைதன்யா பகேலும் ஒன்றாக வசிக்கும் வீட்டில் அமலாக்கத் துறை திங்கள்கிழமை சோதனை மேற்கொண்டது.
இந்த முறைகேடு தொடா்பாக, அந்த மாநிலத்தில் 14 முதல் 15 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்ாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தச் சோதனைக்கு எதிா்ப்பு தெரிவித்து, பூபேஷ் பகேல் வீட்டின் எதிரே ஏராளமான காங்கிரஸ் பிரமுகா்கள் மற்றும் தொண்டா்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்தச் சோதனை குறித்து காங்கிரஸ் ஊடகப் பிரிவுத் தலைவா் பவன் கேரா ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமா்வு திங்கள்கிழமை தொடங்கிய நிலையில், அனைத்துப் பக்கங்களில் இருந்தும் பாஜக முடக்கப்பட்டுள்ளது. எனவே பொருளாதார வீழ்ச்சி, வாக்காளா் பட்டியல் முறைகேடு போன்ற பிரச்னைகளில் இருந்து நாட்டின் கவனத்தைத் திசைதிருப்பும் நோக்கிலும், ஊடகங்களில் தலைப்புச் செய்திகளை மாற்றும் முயற்சியாகவும் பூபேஷ் பகேலின் வீட்டில் சோதனை மேற்கொள்ள அமலாக்கத் துறையை பாஜக அனுப்பியது என்றாா்.
