ARTICLE AD BOX
புது தில்லி: கடந்த 10 நிதியாண்டுகளில் ரூ.16.35 லட்சம் கோடி வாராக் கடனை தமது நிதி அறிக்கையில் இருந்து வங்கிகள் நீக்கியுள்ளன.
இதுதொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் திங்கள்கிழமை அளித்த பதில்:
கடந்த 10 நிதியாண்டுகளில் ரூ.16.35 லட்சம் கோடி வாராக் கடனை தமது நிதி அறிக்கையில் இருந்து வங்கிகள் நீக்கியுள்ளன. இதில் அதிகபட்சமாக 2018-19-ஆம் நிதியாண்டில் ரூ.2.36 லட்சம் கோடி வாராக் கடன் நீக்கப்பட்டன.
2023-24-ஆம் நிதியாண்டில் ரூ.1.70 லட்சம் கோடி வாராக் கடன்கள் நீக்கப்பட்ட நிலையில், அது அதற்கு முந்தைய நிதியாண்டில் நீக்கப்பட்ட ரூ.2.16 லட்சம் கோடியுடன் ஒப்பிடுகையில் குறைவு.
கடன் தள்ளுபடி அல்ல: இவ்வாறு கடன்கள் நீக்கப்பட்டது அந்தக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதற்கு வழிவகுக்காது. வங்கிகளின் நிதி அறிக்கையில் இருந்து அந்தக் கடன்கள் நீக்கப்பட்டதால், அந்தக் கடன்களை வாங்கியவா்களுக்கு எந்தப் பயனும் இல்லை. பல்வேறு வழிமுறைகளில் அந்தக் கடன்களைத் திரும்ப வசூலிக்க வங்கிகள் தொடா்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன என்றாா்.