ARTICLE AD BOX
பனை மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், பனை சார்ந்த தொழில்களை ஊக்குவிக்கவும் “பனை மேம்பாட்டு இயக்கம்” உருவாக்கப்படும். புதிய பலா இரகங்களை பரவலாக்கவும், பலாவின் ஊடுபயிர் சாகுபடியை மேற்கொள்ளவும், பலா மதிப்புக் கூட்டுதலுக்கான பயிற்சி வழங்கவும் ரூ.5 கோடி மதிப்பீட்டில் “பலா மேம்பாட்டு இயக்கம்” உருவாக்கப்படும். ரூ.10 கோடி நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாடு முந்தி வாரியம் ஏற்படுத்தப்படும் என வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வெள்ளிக்கிழமை தாக்கல் செய்துள்ள நிலையில், தமிழக அரசின் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண்மை உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சனிக்கிழமை(மார்ச்.15) தாக்கல் செய்தார்.
முன்னதாக, சென்னை மெரீனாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள், அமைச்சர்கள் அனைவரும் பச்சை துண்டு அணிந்து பங்கேற்றன்.
வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், உழவர்கள் பாதுகாக்கப்பட்டால் அவர்கள் மக்களை பாதுகாப்பார்கள் என்பதால் விவசாயத்துடன் உழவர்களின் நலநை மையப்படுத்தி வேளாண் நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. உழவர்களின் வாழ்வில் இந்த நிதிநிலை அறிக்கை வளர்ச்சியை கூட்டும் என்று நம்புவதாக தெரிவித்தார்.
ரூ.10 கோடியில் தமிழ்நாடு முந்தி வாரியம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழ்நாடு முந்தி வாரியம்
தமிழ்நாட்டில் அரியலூர், கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை மற்றும் தேனி மாவட்டங்களில் முந்திரி அதிகமாக பயிரிடப்படுகிறது. முந்திரி தமிழ்நாட்டில் இரண்டு லட்சத்து ஒன்பது ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டு ஆண்டிற்கு 43 ஆயிரத்து 460 மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படுகிறது.
நாட்டில் தமிழ்நாடு முந்திரி உற்பத்தியில் நான்காவது இடத்தில் இருந்தாலும் ஏற்றுமதியில் இரண்டாவது இடத்தில் உள்ளது. எனவே, முந்திரியின் பரப்பினை உயர்த்தி, உற்பத்தியை அதிகரிக்கவும், முந்திரி சார் தொழில் நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கவும், முந்திரித் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்கவும், ரூ.10 கோடி நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாடு முந்தி வாரியம் ஏற்படுத்தப்படும். இதனால் முந்திரி சாகுபடி செய்யும் உழவர்களும், அதனைச் சார்ந்த தொழில் செய்யும் கிராமப்புர மக்களும் அதிகயளவில் பயனடைவார்கள்.
வேளாண் நிதிநிலை அறிக்கை - 2025 - 2026: முக்கிய சிறப்பு அறிவிப்புகள்!
பனை மேம்பாட்டு இயக்கம்
"நாராய் நாராய் செங்கால் நாராய்
பழம்படு பனையிந் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய்ச் செங்கால் நாராய்" என நாரை விடு தூது பாடலில் பனை குறித்த குறிப்புகள் அமைந்துள்ளது.
தமிழ்நாட்டின் மாநில மரமான பனை மரம், தமிழர்களிந் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது. பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் காலநிலை மீள்தன்மைக்கு உதவும், முக்கியத்துவம் வாய்ந்த பனைமரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பொருட்டு நான்கு ஆண்டுகளாகப் பனை மேம்பாட்டு இயக்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
2025-26 ஆம் ஆண்டில் பனை சாகுபடியை ஊக்குவிக்க பத்து லட்சம் பனை விதைகள், பனை மதிப்புக்கூட்டுப் பொருள் தயாரிக்கும் கூடங்கள், மதிப்புக்கூட்டுதல் பயிற்சி ஆகிய இனங்களுக்கு, பனை மேம்பாட்டு இயக்கத்தில் ஒரு கோடியே 65 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இதன் மூலம் 20 ஆயிரம் நபர்கள் பயனடைவார்கள்.
உழவர் சந்தையில் இருந்து ஆன்லைன் டெலிவரி! வெளியானது சூப்பர் அறிவிப்பு!
பலா மேம்பாட்டு இயக்கம்
"முன்றில் பலவின் படுசுகளை மரீஇப்
புன்தலை மந்தி துர்ப்ப" என வீட்டு முற்றத்தில் பழந்தமிழர் வளர்த்த பலா மரத்தினைப் பற்றிய குறிப்பு நற்றிணையில் இடம் பெற்றுள்ளது.
2023-24 மற்றும் 2024-25 ஆம் ஆண்டுகளில் பலாவிற்குச் சிறப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டு, பரப்பு விரிவாக்கம், ஒருங்கிணைந்த உரம் மற்றும் பூச்சி மேலாண்மை, சிறிய அளிவிலான பலா பதப்படுத்தப்படும் அமைப்பு, பலா சாகுபடி மற்றும் மதிப்புக் கூட்டுதலுக்கான பயிற்சி ஆகியவற்றுக்கு மானியம் வழங்கிட ரூ.3 கோடியே 71 லட்சம் ஒதுக்கப்பட்டது. இதன் மூலம் இதுவரை 2,876 பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.
2025-26 ஆம் ஆண்டில் புதிய ரக பலா சாகுபடி பரவலாக்கம், பலாவில் ஊடுபயிர் சாகுபடி போன்ற திட்டகூறுகள் ஊக்குவிக்கப்படும். இதற்கென ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.