ARTICLE AD BOX
ஆர்யா சந்தானம் நடிப்பில் வெளியான பாஸ் என்கிற பாஸ்கரன் படம் மீண்டும் ரீரிலீஸாகவுள்ளது.
சென்ற ஆண்டு வாலி, காதலுக்கு மரியாதை, யாரடி நீ மோஹினி போன்ற பல பழைய படங்கள் ரீரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பைப் பெற்றன. அதுமட்டுமல்லாமல் திரையரங்கு உரிமையாளர்களும் நல்ல வசூலை ஈட்டினார்கள். இப்படி ரீரிலீஸான படங்களிலேயே மிக அதிகமாக வசூல் ஈட்டிய படம் கில்லி. சமீபத்தில் தளபதி, மன்மதன், வல்லவன் ஆகிய படங்கள் ரீரிலீஸ் செய்யப்பட்டன.
இந்தாண்டு வேறு விதமான ஸ்டைலை பயன்படுத்துகிறார்கள். அதாவது நன்றாக ஓடிய படத்தின் வெளியிடப்பட்ட தேதி அன்று மீண்டும் ரீரிலீஸ் செய்வது ட்ரெண்டாகி வருகிறது. அல்லது ஹீரோக்களின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக அவர்களின் ஹிட்டான படங்கள் மீண்டும் ரிலீஸ் செய்யப்படுகின்றன.
இப்படிதான் ரஜினி பிறந்தநாள் அன்று தளபதி படம் ரீரிலீஸ் செய்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அதேபோல், சிம்பு பிறந்தநாளன்று வல்லவன், மன்மதன் ஆகிய படங்கள் ரீரிலீஸ் செய்யப்பட்டன.
தற்போது இத்தனை ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது என்று கூறி அதனை கொண்டாடும் விதமாக மேலும் சில படங்கள் ரீரிலீஸ் செய்யப்படவுள்ளன. அதாவது சச்சின், ரஜினிமுருகன் (ரீரிலீஸாகிவிட்டது), பொல்லாதவன் என்று நிறைய படங்கள் வரிசையில் இருக்கின்றன.
இந்த வரிசையில் தற்போது பாஸ் என்கிற பாஸ்கரன் படமும் இணைந்துள்ளது.
ஆர்யா, சந்தானம், நயன்தாரா நடிப்பில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் 'பாஸ் என்கிற பாஸ்கரன்'. இப்படத்தின் இயக்குநர் எம்.ராஜேஷ். இவரின் இரண்டாவது படம் இது. முதல்படம் சிவா மனசுல சக்தி ஆகும்.
பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் விஜயலட்சுமி, சித்ரா லட்சுமணன், ஷகிலா, மொட்டை ராஜேந்திரன், உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் எத்தனை முறை தொலைக்காட்சியில் போட்டாலும், ஒவ்வொருமுறையும் புதிதாகப் பார்ப்பதுபோல் பார்க்கும் ரசிகர்கள் ஏராளம். அதற்கு முதற்காரணம் சந்தானம் மற்றும் ஆர்யாவின் காமெடி.
இவர்கள் இன்றுவரை மக்களுக்குப் பிடித்தமான காமெடி பார்ட்னாராக இருக்கிறார்கள்.
அதேபோல், சந்தானம் காமெடியனாக நடித்த எந்த படம் என்றாலும், ரசிகர்கள் ஆர்வமுடன் தியேட்டரில் பார்ப்பார்கள் என்பதற்கு மத கஜ ராஜாவே சாட்சி.