ARTICLE AD BOX

சென்னை,
மராத்திய பேரரசர் சத்ரபதி சிவாஜி - சாயிபாய் தம்பதியின் மூத்த மகனான சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் 'சாவா'. லக்ஸ்மன் உடேகர் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் விக்கி கவுசல் சத்ரபதி சம்பாஜி மகாராஜாவாக நடித்துள்ளார். நடிகை ராஷ்மிகா மந்தனா சம்பாஜியின் மனைவி மகாராணி ஏசுபாய் கதபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் நடிகர் அக்சய் கண்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். காதலர் தினத்தில் வெளியான இப்படம் ரூ.197 கோடி வசூல் செய்துள்ளது.
இந்த நிலையில், சத்ரபதி சாம்பாஜியின் தந்தை சத்ரபதி சிவாஜி மகாராஜின் 395-வது பிறந்தநாள் நேற்று விமர்சையாக கொண்டாடப்பட்டது. அதனை சிறப்பிக்கும் வகையில் மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் தனது மாநிலத்தில் 'சாவா' படத்திற்கு வரிவிலக்கு அளிக்கப்படும் என்று அறிவித்தார்.
அதனை தொடர்ந்து, கோவா மாநிலத்திலும் வரிவிலக்கு அளிக்கப்படும் என கோவா அரசு அறிவித்துள்ளது. இது குறித்து கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்திருப்பதாவது, "சத்ரபதி சாம்பாஜி மகாராஜின் வாழ்க்கை மற்றும் தியாகத்தை அடிப்படையாகக் கொண்ட "சாவா" திரைப்படத்திற்கு கோவாவில் வரி விலக்கு அளிக்கப்படும் என்று அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் சத்ரபதியின் தியாகம் நம் அனைவருக்கும் ஒரு உத்வேகம்," என்று அவர் அதில் பதிவிட்டுள்ளார்.