ARTICLE AD BOX
ராஷ்டிரபதி பவன் குடியரசுத் தலைவரின் அதிகாரப்பூர்வ இல்லமாக தலைநகர் டெல்லியின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. 1929ம் ஆண்டு எட்வின் லுட்டியன்ஸ் மற்றும் ஹெர்பர்ட் பேக்கர் ஆகியோரால் குடியரசுத் தலைவரின் மாளிகை வடிவமைக்கப்பட்டு கட்டி முடிக்கப்பட்ட ராஷ்டிரபதி பவன் முதலில் ‘வைஸ்ராய் மாளிகை’ என்று அழைக்கப்பட்டது. மொத்தம் 3,40,000 சதுர அடி பரப்பளவைக் கொண்ட இந்த இல்லத்தில் 56 படுக்கையறைகள், 31 குளியலறைகள் மற்றும் 11 உணவகங்கள் உட்பட மொத்தம் 340 அறைகள் உள்ளன.
ராஷ்டிரபதி பவன் பொதுமக்கள் பார்வைக்கு வார நாட்களில் அனுமதிக்கப்படுகிறது. மிகவும் சிறப்புமிக்க இந்த குடியரசுத் தலைவர் மாளிகையில், இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக இருந்த ராஜேந்திர பிரசாத் குடியேற மறுத்தார்.
1950 ஜனவரி 24 அன்று அரசியல் சட்டமன்றத்தின் இறுதி கூட்டத்தில் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜேந்திர பிரசாத், நேருவின் முதல் அமைச்சரவையில் வேளாண்மைத் துறை அமைச்சராகவும் முதல் குடியரசுத் தலைவராகவும் பணியாற்றிய இவர்தான் குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியேற மறுத்தார்.
பிரிட்டிஷ் வைஸ்ராயின் முன்னாள் இல்லமான ஆடம்பரமான வைஸ்ராய் மாளிகையை ராஷ்டிரபதி பவன் என்று பெயர் மாற்ற வேண்டும் என்று நீண்ட நாட்களாக வலியுறுத்தி வந்த ராஜேந்திர பிரசாத், பதவியேற்றதும் பெயர்மாற்றத்தை செயல்படுத்தினார்.
நான்கு மாடிகள் கொண்ட இந்தக் கட்டடம் 330 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்த ஆடம்பரமான மாளிகையாகும். செலவு அதிகம் பிடிக்கும் இந்த மாளிகையில் காந்தியின் கொள்கைகளை கொண்டிருந்ததால் ராஜேந்திர பிரசாத் ராஷ்டிரபதி பவனில் வசிப்பது மக்களுடனான தனது நெருக்கத்தைப் பிளவுபடுத்தும் என நினைத்தார். மேலும், இதற்காகும் செலவுகளை வேறு எதற்காவது பயன்படுத்தலாம் என்றும் நினைத்தார்.
ஆனால், அன்றைய பிரதமராக இருந்த நேருவும், சர்தார் வல்லபாய் படேலும், குடியரசுத் தலைவரின் கண்ணியத்தையும், அதிகாரத்தையும், பாதுகாப்பு காரணங்கள் உள்ளிட்டவற்றைக் கூறி, அவரை ஒப்புக்கொள்ள வைத்தனர்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியேறிய பின்னரும், ராஜேந்திர பிரசாத் பல மாற்றங்களைக் கொண்டு வந்து 330 அறைகளை உடனடியாக மூடச் சொன்ன அவர், 2 அறைகளை மட்டும் தனக்காகத் திறக்கச் சொன்னதோடு, விருந்தினர்களுக்கு 8 அறைகளை மட்டும் ஒதுக்கினார்.
மேலும், சமையலறையில் அசைவ உணவுகளை சமைக்கக் கூடாது என உத்தரவிட்டு, டைனிங் டேபிளை எடுக்கச் சொல்லி, எளிமையான வாழ்வுக்கு உதாரணமாக, சமணங்கால் போட்டு சாப்பிட்டு வாழ்ந்தார்.
ராஜேந்திர பிரசாத் மட்டுமல்லாமல், இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜியும், ஆடம்பர வாழ்க்கையை விரும்பவில்லை. இவர்கள் மட்டுமல்லாமல், குடியரசுத் தலைவராகப் பதவியேற்ற நீலம் சஞ்சீவி ரெட்டியும், இந்த ஆடம்பர செலவுகளைக் குறைத்து எளிமையாக வாழ்ந்தனர்.
எவ்வளவு உயர்ந்த பதவியில் ஆடம்பர வசதிகள் தானே தேடி வந்தாலும் மேன் மக்கள் அவற்றை விரும்பாமல் தங்களுடைய எளிய வழியையே பின்பற்றி வாழ்ந்தனர் என்பதற்கு இது ஒரு உதாரணம்.