ARTICLE AD BOX
மதுரை மாவட்டம் கச்சைகட்டி பெருமாள் நகரை சேர்ந்தவர் முனியசாமி. இவர் கடந்த 30 ஆண்டுகளக ஆபரண நகைகளில் ஜாதிக்கற்களை பதிக்கும் தொழில் செய்து வருகிறார். இவற்றுடன் அதுபோன்ற கற்கள் விற்பனையிலும் ஈடுபட்டு வருகிறார். இவர் தன்னிடம் அதிக விலை மதிப்பு கொண்ட ரத்தினக்கல் ஒன்று விற்பனைக்கு உள்ளதாக சிவகாசியை சேர்ந்த புரோக்கர் ஜாகிரிடம் கூறியுள்ளார்.
இது தொடர்பாக திருநெல்வேலியை சேர்ந்த ரவி என்பவரை முனியசாமியிடம் அறிமுகப்படுத்தியுள்ளார் ஜாகிர். ரவி ரத்தினக்கல் விற்பனை குறித்து பெரியகுளத்தை சேர்ந்த செய்யது அபுதாஹிர் கூறியதை தொடர்ந்து, வியாபாரி முனியசாமியை தொடர்பு கொண்ட அபுதாஹி ர் முனியசாமியை ராமநாதபுரத்திற்கு வர கூறியுள்ளார்.
இதையடுத்து கடந்த ஜனவரி 24-ம் தேதி காரில் ரத்தினக்கல்லுடன் ராமநாதபுரம் ரயில்வே கேட் பகுதிக்கு வந்துள்ளார் முனியசாமி. அப்போது அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த கும்பல் ஒன்று முனியசாமியை மிரட்டி அவரிடம் இருந்த ரூ.60 லட்சம் மதிப்புடைய அலெக்ஸாண்டர் வகை ரத்தினக்கல்லையும், அதற்கான ரசீது, செல்போன் மற்றும் ரூ 15 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறித்து சென்றனர்.


இது குறித்து ராமநாதபுரம் போலீஸாரிடம் புகார் சென்ற நிலையில் மாவட்ட கண்காணிப்பாளர் சந்தீஷ் உத்தரவுப்படி, அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பொன்தேவி தலைமையில் தனிப்படை அமைத்து வழிப்பறி கும்பல் குறித்து விசாரணையில் இறங்கினர்.

இதனை தொடர்ந்து சம்பவ பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து, அதில் பதிவான வழிப்பறி கும்பலின் காரினை கண்டறிந்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், பெரியகுளம் அபுதாஹிர், இளையான்குடி முகம்மது அசாருதீன், முகம்மது நவுபால், தூத்துக்குடி முத்து செல்வம், கனகராஜ், மற்றொரு கனகராஜ், அத்திரமரபட்டி ராஜாஜோஸ்குமார் ஆகியோரை கைது செய்தனர்.
இவர்களிடம் இருந்து சுமார் 60 லட்சம் மதிப்புடைய ரத்தினக்கல், அதற்கான ரசீது உள்ளிட்ட வழிப்பறி செய்யப்பட்ட அனைத்தையும் மீட்டனர். இதையடுத்து இவர்கள் மீது வழிப்பறி உள்ளிட்ட வழக்குகளை பதிவு செய்த போலீஸார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.