’ரயில்வே தேர்வுக்கு தமிழ் மாணவர்களுக்கு 1000 கி.மீக்கு அப்பால் தேர்வு மையமா?’ விளாசும் சீமான்

1 day ago
ARTICLE AD BOX

வேறு மாநிலங்களில் தேர்வு மையம் 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொடர்வண்டித்துறை தேர்வெழுத தமிழ்நாட்டிலிருந்து விண்ணப்பித்திருந்த தேர்வர்களுக்கு வேற்று மாநிலங்களில் தேர்வு மையங்களை ஒதுக்கியிருக்கும் தொடர்வண்டித்துறை பணியாளர் தேர்வு வாரியத்தின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. இது முழுக்க முழுக்க, இந்திய ஒன்றிய அரசின் பணிகளுக்கு தமிழ்நாட்டு இளைஞர்கள் தேர்வாகி விடக்கூடாது என்ற திட்டமிட்ட தொடர் நடவடிக்கைகளின் நீட்சியேயாகும். தென்னக தொடர்வண்டித்துறையில் காலியாகவுள்ள 493 லோகோ பைலட் பணியிடங்களுக்கான இரண்டாம் கட்ட தேர்வு வருகின்ற 19.03.25 அன்று நடைபெறவுள்ளது. இத்தேர்விற்காக, தமிழ்நாட்டிலிருந்து விண்ணப்பித்த தேர்வர்களுக்கு தெலுங்கானாவில் தேர்வு மையங்களை ஒதுக்கி, நுழைவுச் சீட்டினை அனுப்பி இருப்பது தேர்வர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

1000 கி.மீக்கு அப்பால் தேர்வு மையமா?

முதற்கட்டத் தேர்வுக்கு அருகாமையிலேயே தேர்வு மையங்களை அமைத்துக்கொடுத்த தேர்வாணையம் இரண்டாம் கட்ட தேர்விற்கு 1000 கி.மீ.க்கு அப்பால் தெலுங்கானா மாநிலத்தில் தேர்வு மையங்களை ஒதுக்கியுள்ளது. தேர்வு மையம் குறித்து நான்கு நாட்களுக்கு முன்பே அறிவிக்கப்படும் என்ற நிலையில், வேறு மாநிலத்தின் இரண்டாம் நிலை நகரத்தின் ஏதோ ஒரு மூலையில் அமைந்துள்ள தேர்வு மையத்தினை தமிழகத் தேர்வர்கள் கண்டறிவதில் மிகப்பெரிய நடைமுறை சிக்கல் உள்ளது. எனவே, இது தமிழகத் தேர்வர்களிடம் தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தி, உளவியலாக அவர்களைச் சிதைத்துத் தோல்வியுறச் செய்வதற்கும், தமிழகத் தேர்வர்களைத் தேர்வு எழுத விடாமலேயே போட்டியிலிருந்து வெளியேற்றுவதற்குமென செய்யப்படும் சூழ்ச்சியேயாகும். இந்திய ஒன்றியத்திற்கு அதிக வருவாயை ஈட்டித்தருவதில் முன்னணி மாநிலமாகத் திகழ்கின்ற தமிழ்நாட்டில் போதிய அளவில் தேர்வு மையங்களை அமைக்காதது ஏன்?

வாய்மூடி வேடிக்கைப்பார்ப்பது ஏன்?

கடந்த 2019 ஆம் ஆண்டு தொடர்வண்டித்துறையின் முதல்நிலை தேர்விலும் இதேபோன்று வேற்று மாநிலங்களில் தேர்வு மையங்களை அமைத்து அறிவிப்பு வெளியானபோதும், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தவுடன் உடனடியாக அந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டது. அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக அது குறித்து உடனடியாகக் கேள்வி எழுப்பிய நிலையில், திமுக ஆட்சி அமைந்த பிறகு 2022 ஆம் ஆண்டு மற்றும் தற்போதும் தேர்வு மையங்கள் வேற்று மாநிலத்தில் அமைக்கப்படுவதை வாய்மூடி வேடிக்கைப்பார்ப்பது ஏன்? தமிழ்நாட்டில் தேர்வு மையங்களை அமைக்க அரசு சார்பாக என்ன முயற்சி மேற்கொள்ளப்பட்டது? என்பதை திமுக அரசு விளக்க வேண்டும்.

உடனடியாக மாற்றி அமைத்து தருக

ஆகவே, இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு தொடர்வண்டித்துறை தேர்வு எழுதும் தமிழகத் தேர்வர்கள் தமிழ்நாட்டிலேயே தேர்வு எழுதும் வகையில் தேர்வு மையங்களை உடனடியாக மாற்றி அமைத்துதர தொடர்வண்டித்துறைக்கு உத்தரவிட வேண்டுமெனவும், அதுவரை தொடர்வண்டித்துறை இரண்டாம் கட்டத் தேர்வினை தள்ளிவைக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.

Kathiravan V

TwittereMail
காஞ்சி கதிரவன், 2016ஆம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் உள்ளார். இயந்திரவியல் பட்டயப்படிப்பு, இளங்கலை அரசியல் அறிவியல், முதுகலை வணிக மேலாண்மை படித்து உள்ளார். தொலைக்காட்சி, டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அரசியல், நாட்டு நடப்பு, தொழில்முனைவு, வரலாறு, ஆன்மீகம் சார்ந்த செய்திகளில் பங்களித்து வருகிறார். அபுனைவு நூல்கள் வாசிப்பும், உரைகள் கேட்டலும், உரையாடல்களும் இவரது பொழுதுபோக்கு.
Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.
Read Entire Article