ரமலான் நோன்பு கஞ்சி தயாரிக்க 7,920 டன் பச்சரிசி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

1 day ago
ARTICLE AD BOX

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

ஒவ்வொரு ஆண்டும் புனித ரமலான் மாதத்தில் நோன்பு இருக்கும் இஸ்லாமிய மக்களுக்கு நோன்புக் கஞ்சி தயாரித்து வழங்கும் பொருட்டு, பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி, தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளைப் போலவே, 2025-ம் ஆண்டிலும் ரமலான் மாதத்தில் நோன்புக் கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்க வேண்டும் என்று இஸ்லாமிய மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

2025-ம் ஆண்டு, ரமலான் மாதத்தில் நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிப்பதற்கு ஏதுவாக பள்ளிவாசல்களுக்கு மொத்த அனுமதியின் கீழ் நோன்பு கடைபிடிக்கப்படும் நாட்களுக்கு மட்டும் பச்சரிசி வழங்கிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

பள்ளிவாசல்களுக்குத் தேவைப்படும் அரிசிக்கான மொத்த அனுமதியை வழங்க மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்குத் தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி, 7,920 மெட்ரிக் டன் அரிசி மொத்த அனுமதி மூலம் பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும். இதனால், அரசுக்கு 18 கோடியே 41 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Read Entire Article