ARTICLE AD BOX
ரத்த புற்றுநோய் வந்த ஹுசைனி.. 20 லிட்டர் ரத்தத்தை உறைய வைத்து என்ன செஞ்சாரு தெரியுமா?
சென்னை: பத்ரி படத்தின் மூலம் ஃபேமஸான கராத்தே மாஸ்டர் ஷிஹான் ஹுசைனிக்கு ரத்த புற்றுநோய் வந்திருக்கிறது. ஒருநாள் வாழவே இரண்டு யூனிட் ரத்தம் தேவைப்படுகிறது. இதுகுறித்து அவர் தனியார் யூடியூப் சேனல்களுக்கு உருக்கத்துடன் தெரிவித்திருந்தார். அதேசமயம் கராத்தே வீரனான எனக்கு எந்தவிதமான பயமும் இல்லை; எனது நாட்கள் எண்ணப்பட்டுக்கொண்டிருக்கின்றன என்றும் கூறியிருந்தார். இந்தச் சூழலில் அவர் நலத்துடன் இருந்தபோது தன்னுடைய 20 லிட்டர் ரத்தத்தை என்ன செய்தார் என்பது குறித்து பார்க்கலாம்.
கே.பாலசந்தரால் சினிமாவில் அறிமுகம் ஆனவர் ஷிஹான் ஹுசைனி. இவரும் மறைந்த நடிகர் விவேக்கும் சினிமாவுக்கு வருவதற்கு முன்பிருந்தே நண்பர்கள். இரண்டு பேரும் ஒரே கல்லூரியில் படித்தபோது இவரது கராத்தே கலையை கலாய்த்து விவேக் நாடகம் போட்டிருக்கிறார். அப்போது இரண்டு பேருக்கும் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் பிரிக்க முடியாத நட்பாக மாறியது என்பது குறிப்பிடத்தக்கது. விவேக்கிற்கு முன்னதாகவே ஹுசைனி சினிமாவுக்குள் வந்துவிட்டாலும் அவரது தேடலும், ஆர்வமும் வேறொரு கலையில் இருந்தது.

கராத்தே மாஸ்டர்: அது கராத்தே. கல்லூரி காலத்திலிருந்தே கராத்தே வீரராக திகழ்ந்த அவர் ஒருகட்டத்தில் கராத்தே மாஸ்டராகிவிட்டார். விஜய், பவன் கல்யாண் உள்ளிட்ட ஸ்டார்களுக்கு அவர்தான் கராத்தே சொல்லிக்கொடுத்தார். பவன் சென்னையில் வந்து ஹுசைனியின் இடத்தில் ஒரு வார காலம் தங்கி கராத்தே கற்றுக்கொண்டு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமா ஸ்டார்களுக்கு மட்டுமின்றி சாமானியர்களுக்கும் கராத்தேவை சொல்லிக்கொடுப்பதில் தீராத ஆர்வம் கொண்டிருந்தார் ஹுசைனி.
கராத்தே மட்டுமில்லை: ஹுசைனியை பொறுத்தவரை கராத்தே மட்டுமில்லை வில்வித்தையிலும் கை தேர்ந்தவர். அவர் வில்வித்தைக்கான சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருந்தவர். மேலும் பல யுவன்களுக்கும், யுவதிகளுக்கும் அவர் வில்வித்தையை தொடர்ந்து கற்றுக்கொடுத்தவர். அதன் காரணமாக பலரும் இந்திய அளவிலும், உலக அளவிலும் வில்வித்தை போட்டியில் பரிசுகளை வென்று குவித்திருக்கிறார்கள். இதன் காரணமாக அவர் மீது பலரும் தங்களது மதிப்பையும், மரியாதையையும் வைத்திருக்கிறார்கள்.
சின்னத்திரையிலும் ஹுசைனி: பெரிய திரையில் சில படங்களில் நடித்த அவருக்கு பத்ரி படத்தில் நல்லதொரு வெளிச்சம் கிடைத்தது. அந்தப் படத்தி விஜய்க்கு ட்ரெய்னராக வருவார். தொடர்ந்து படங்களில் நடிக்காமல் கராத்தே போன்றவைகளில் கவனம் செலுத்திய அவர் சின்னத்திரையில் தோன்றி கராத்தே பயிற்சி கொடுப்பார். அதேபோல் அதிரடி சமையல் என்கிற நிகழ்ச்சியையும் அவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடத்தினார். அது அப்போதைக்கு பலரிடமும் கவனத்தை ஈர்த்தது. சில காலம் அது சம்பந்தமான வீடியோக்கள் சமூக வலைதளங்களிலும் அதிகம் பரவின.

ரத்த புற்றுநோய்: அடிப்படையில் மிகவும் தைரியசாலியான அவருக்கு பெரிய இடி ஒன்று இறங்கியது. அதாவது அவருக்கு ரத்த புற்றுநோய் வந்திருக்கிறது. இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டி ஒன்றில், "நான் ஒருநாள் வாழ்வதற்கு 2 யூனிட் ரத்தம் மற்றும் பிளேட்லெட்ஸ் வேண்டும். எனக்கு மன தைரியம் அதிகம். மரணத்தை கண்டு அஞ்சமாட்டேன். நான் கராத்தே பயிற்சி தரும் இடத்தை விற்க முடிவு செய்திருக்கிறேன். எனவே அதனை பவன் கல்யாண் வாங்கிக்கொள்ள வேண்டும். உதயநிதி, விஜய் போன்றவர்கள் தமிழ்நாட்டில் வீட்டுக்கு ஒரு வில்வித்தை வீரர், வீராங்கனைகளை உருவாக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.
ரீ ரிலீஸில் தள்ளிப்போகும் தளபதி விஜய்யின் படம்.. அப்செட்டில் ரசிகர்கள்.. கலாய்க்கும் இணையவாசிகள்
20 லிட்டர் ரத்தத்தை உறைய வைத்த ஹுசைனி: ஹுசைனியின் இந்தப் பேட்டிக்கு பிறகு பலரும் அவருக்காக வேண்டிக்கொள்ள ஆரம்பித்தார்கள். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வீடியோ கால் அவருக்கு ஆறுதல் தெரிவித்தார். இதற்கிடையே ஹுசைனி தீவிரமான அதிமுக அபிமானி. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது அவர் செய்த செயல் ஒன்று அனைவரையும் நெகிழ வைத்தது. அதாவது தன்னுடைய 20 லிட்டர் ரத்தத்தை உறைய வைத்து ஜெயலலிதாவுக்கு சிலை செய்து பரிசாக கொடுத்தவர் என்பது நினைவுகூரத்தக்கது. அந்த சமயத்தில் அது விமர்சனத்தையும், வரவேற்பையும் ஒருசேர சந்தித்தது. ஆனால் ஹுசைனி அதற்கெல்லாம் கவலைப்படவில்லை. அப்படி தன்னுடைய 20 லிட்டர் ரத்தத்தை உறைய வைத்த மனிதர் இன்று ஒருநாள் வாழவே இரண்டு லிட்டர் ரத்தம் தேவைப்படுகிறதே என்று நெட்டிசன்கள் வருத்தத்துடன் பதிவிட்டுவருகின்றனர்.