ரகமது ஷா போராட்டம் வீண்: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி

3 days ago
ARTICLE AD BOX

கராச்சி,

9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் கராச்சியில் இன்று நடைபெற்ற 3வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

இதையடுத்து அந்த அணியின் தொடக்க வீரர்களாக டோனி ஜி ஜோர்ஜி மற்றும் ரியான் ரிக்கல்டன் ஆகியோர் களம் இறங்கினர். இதில் டோனி ஜி ஜோர்ஜி 11 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து பவுமா களம் புகுந்தார். பவுமா - ரிக்கல்டன் இணை நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தது. நிதானமாக ஆடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர்.

இதில் பவுமா 58 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து வேன் டர் டுசென் களம் இறங்கினார். மறுபுறம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிக்கல்டன் சதம் அடித்த நிலையில் 103 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து மார்க்ரம் களம் இறங்கினார். மார்க்ரம் - வேன் டர் டுசென் ஜோடி நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தது. இதில் வேன் டர் டுசென் அரைசதம் அடித்த நிலையில் 52 ரன்னில் அவுட் ஆனார்.

இதையடுத்து களம் கண்ட மில்லர் 14 ரன்னில் அவுட் ஆனார். மறுபுறம் அதிரடியில் மிரட்டிய மார்க்ரம் 33 பந்தில் அரைசதம் அடித்து அசத்தினார். இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 315 ரன்கள் குவித்தது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக ரியான் ரிக்கல்டன் 103 ரன்கள் அடித்தார். ஆப்கானிஸ்தான் தரப்பில் முகமது நபி 2 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து 316 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்கம் முதலே தென் ஆப்பிரிக்க அணியினரின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. ஒருபுறம் ரகமது ஷா தனது ரன் வேட்டையை தொடர்ந்த நிலையில் மறுபுறம் அவருக்கு பக்கபலமாக நிற்க எந்த வீரரும் இல்லை.

இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 43.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 208 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் சார்பில் அதிகபட்சமாக ரகமது ஷா 90 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்க அணியின் சார்பில் அதிகபட்சமாக ரபாடா 3 விக்கெட்டுகளும், நிகிடி மற்றும் முல்டர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதன்மூலம் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 107 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி அபார வெற்றிபெற்றது.


Read Entire Article