இந்திய மக்கள் மத்தியில் இண்டர்நெட் பயன்பாடு அதிகரித்த நாளில் இருந்து டிஜிட்டல் கன்டென்ட் நுகர்வு மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இந்த மாற்றத்தால், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இருப்பது போலவே ஒரு துடிப்பான கிரியேட்டர் எக்னாமி இந்தியாவிலும் உருவாகியுள்ளது. இந்த கன்டென்ட் கிரியேட்டர்களில் 90 சதவீதம் பேர் இளைஞர்கள், இவர்களை கார்ப்ரேட் நிறுவனங்களும், பிராண்டுகளும் அதிகம் பயன்படுத்தி பலன் பெற்று வருகிறது.
சாமானிய மக்களை அடையும் முக்கிய கருவியாக இந்த கன்டென்ட் கிரியேட்டர்கள் உருவாகியிருக்கும் வேளையில், இந்த துறையை மேலும் வலுப்படுத்தும் முயற்சியாக, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் சமீபத்தில் கிரியேட்டர் எக்னாமி-க்காக ஒரு பில்லியன் டாலர் நிதியை அறிவித்துள்ளது பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.

உலக ஆடியோ-விஷுவல் மற்றும் பொழுதுபோக்கு உச்சி மாநாடு (WAVES) 2025 தொடர்பாக நடந்த ஒரு உயர்மட்ட கூட்டத்தில் மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கலந்துக்கொண்டார், இதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் 1 பில்லியன் டாலர் திட்டம் குறித்து அறிவித்தார்.
இந்த திட்டம் ஒரு பொது-தனியார் கூட்டாண்மை (PPP) ஆக அமைக்கப்படும், அரசாங்க பங்களிப்புகள் மற்றும் தனியார் துறை ஈடுபாடு தொடர்பான விரிவான திட்ட வரைவு விரைவில் வெளியிடப்படும் எனவும் அமைச்சர் வெளியிட்டுள்ளார். கன்டென்ட கிரியேட்டர் துறை வெறும் பொழுதுபோக்கு பிரிவாக மட்டும் அல்லாமல் தற்போது பெரும் பணம் புழங்கும் முக்கியமான தளமாக மாறியுள்ளது.
இந்த 1 பில்லியன் டாலர் நிதி அறிவிப்போடு, இந்திய கிரியேட்டர் தொழில்நுட்ப நிறுவனம் (IICT) உருவாக்க மத்திய அரசு 391 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. IITs மற்றும் IIMs ஆகியவற்றின் மாடலை பின்பற்றி இந்த கல்வி அமைப்பு உருவாக்கப்படும். கிரியேஷன் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களில் நிபுணத்துவத்தை வளர்ப்பதற்கான முக்கிய அமைப்பாக இது செயல்படும்.
கோரேகானில் மும்பை ஃபிலிம் சிட்டியில் அமைந்துள்ள இந்த IICT, கிரியோட்டிவ் துறையில் திறன்வாய்ந்த பணியாளர்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு இந்த கல்லூரி உருவாக்கப்பட்டு உள்ளது.
மே 1 முதல் 4 வரை மும்பையில் நடைபெற உள்ள WAVES 2025, உயர்தர கன்டென்ட் உருவாக்கு கிரியேட்டர்களுக்கான பிரத்தியேக தளத்தை அறிமுகம் செய்யப்பட உள்லது. இந்த கூட்டம் மூலம் டிஜிட்டல் கன்டென்ட் கிரியேட்டர்களுக்கு நிதி, திறன் மேம்பாட்டு வாய்ப்புகள் மற்றும் உலக சந்தைக்கு செல்வதற்கான வழிகள் உள்ளிட்ட முக்கியமான வாய்ப்புகளை வழங்கப்பட உள்ளது.
இந்த WAVES 2025 உச்சி மாநாடு சுமார் 100 நாடுகளை சேர்ந்தவர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது, மீடியோ, தொழில்நுட்பம் மற்றும் பொழுதுபோக்கு துறைகளில் இருந்து முன்னணி வல்லுநர்கள் இதில் கலந்துகொள்ள உள்ளனர். மேலும், ஆடியோவிஷுவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்கத்தில் சமீபத்திய மாற்றங்கள் முன்னேற்றங்கள் குறித்த விரிவாக விவாதங்களை நடத்தப்பட உள்ளது.
social media influencers மற்றும் கன்டென்ட் கிரியேட்டர்களுக்கு ஏன் இவ்வளவு பெரிய தொகையை ஒதுக்க வேண்டும்? என்ற கேள்வி அனைவரிடத்திலும் உள்ளது. ஏற்கனவே கூறியது போது இந்த கன்டென்ட் கிரியேட்டர்கள் மக்களுக்கும், கார்ப்ரேட்-க்கும் மத்தியிலான பாலமாக உள்ளனர். இதேபோல் இன்றைய டிஜிட்டல் உலகில் மார்கெட்டிங் துறைக்கு இவர்கள் முக்கியமான பங்கு வகிப்பது மட்டும் அல்லாமல் அதிகப்படியான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திறன்கொண்டதாக இத்துறை விளங்குகிறது.
மேலும் இளம் தலைமுறையினர் அதிகம் பங்குப்பெறும் இடமாக இருக்கும் காரணத்தால் ஃபேஷன், பயணம், உடற்பயிற்சி, உணவு மற்றும் நிதி போன்ற பல்வேறு துறைகளில் தொழில் முனைவோருக்கு இந்த social media influencers மற்றும் கன்டென்ட் கிரியேட்டர்கள் முக்கியமானவர்களாக உள்ளனர்.
சமீபத்திய பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவதற்கான இலக்கை நோக்கிய பயணத்தில் கன்டென்ட் கிரியேட்டர்கள் முக்கிய பங்காக உள்ளனர் என்று வலியுறுத்தினார். இந்தியாவின் வளமான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை உலகளாவிய மக்களுக்கு கொண்டு செல்லும் மெசஞ்சராக இவர்கள் உள்ளனர் என்று குறிப்பிட்டார். இந்த முதலீடு, இந்தியாவின் டிஜிட்டல் எதிர்காலத்தை வடிவமைப்பதில் ஒரு முக்கிய படியாக பார்க்கப்படுகிறது.