“யார் துரோகி? யார் சீனியர்? ஜெ.வுக்கு எதிராக வேலை செய்தவர் ஓபிஎஸ்!” தேனியில் சீறிய இபிஎஸ்! 

11 hours ago
ARTICLE AD BOX
O Pannerselvam - Edappadi Palanisamy

தேனி : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று தேனியில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் பங்கேற்றார். இந்நிகழ்வில் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனியில் அவரை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார் எடப்பாடி பழனிசாமி. யார் துரோகி, ஜெயலலிதாவுக்கு எதிராக வேலை செய்தவர், அதிமுக ஆட்சியை அகற்றக்கோரி வாக்களித்தவர், அதிமுக தலைமை செயலகத்தை சூறையாடியவர் என கடுமையாக சாடினார்.

இபிஎஸ் பேசுகையில், ” ‘எடப்பாடி ஒரு  மூழ்கும் கப்பல். அதில் யாரும் ஏறமாட்டார்கள். நன்றி மறந்த துரோகிகளை விரட்டினால் தான் அதிமுக காப்பாற்றப்படும்.’ இதனை சொன்னவர் யார் என்று உங்களுக்கே தெரியும். (ஓபிஎஸ் பெயரை குறிப்பிடவில்லை) . இது குறித்த விளக்கங்களை அளிக்க நான் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். அதில், சரி தவறை நீங்களே புரிந்து கொள்ளுங்கள். புரட்சித்தலைவி அம்மா (ஜெயலலிதா) துரதிஷ்டவசமாக இறந்து விடுகிறார்கள். இவருக்கு முதலமைச்சர் வாய்ப்பு ஒரு சூழ்நிலையில் கிடைக்கப்பெறவில்லை. உடனே தர்மயுத்தம் செய்தவர் இவர். இவருக்கு பதவி கிடைக்கவில்லை என்றால் எந்த எல்லைக்கும் போவார். பிறகு வேறு வழியில்லாமல் என்னை முதலமைச்சராக சட்டப்பேரவையில் தேர்ந்தெடுத்தார்கள்.

ஆளுநர் சட்டப்பேரவையில் பெரும்பான்மை நிரூபிக்க கூறினார். அதில் என்னை எதிர்த்து ஓட்டு போட்டவர் இவர். அதிமுக ஆட்சி அகற்றப்பட வேண்டுமென எதிர்த்து ஓட்டு போட்ட மனிதர் இவர். தொண்டர்கள் பலர் உழைத்து பெற்ற வெற்றியை வீழ்த்த பார்த்தவர். திமுகவுக்கு துணை நின்றவர். இந்த மண்ணிலே பிறந்தவர் யார் என்று உங்களுக்கே தெரியும் (ஓபிஎஸ் பெயரை குறிப்பிடவில்லை) நானா துரோகம் செய்தேன்?

இது துரோகம் இல்லையா?

அதிமுகவுக்கு எதிராக ஓட்டு போட்டவர். இரட்டை இலை முடக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் கடிதம் கொடுத்தவர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தை ரவுடிகளை கூட்டிச்சென்று அடித்து நொறுக்கியவர். அந்த அலுவலகத்தை திமுகவினர் கொண்டு சீல் வைத்தீர்களே இது துரோகம் இல்லையா?  எவ்வளவோ  கெஞ்சி பார்த்தோம். எங்களை விட்டு போகாதீங்க என்று கூறினோம். நீங்களா போனீங்க, இதில் நாங்கள் என்ன காரணம்? எங்கள் மீது ஏன் பழி சுமத்தி எந்த பிரயோஜனமும் இல்லை.

ஜெ.வுக்கு எதிராக வேலை பார்த்தவர் :

எப்போது பார்த்தாலும் அம்மா விசுவாசி என்கிறீர்களே? 1989இல் இதே மாவட்டத்தில் போடியில் அம்மா (ஜெயலலிதா) போட்டியிட்டார்கள். அப்போது வெண்ணிற ஆடை நிர்மலாவுக்கு வேலை செய்தார்.  அதே சமயம் அதிமுக சார்பில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவன் நான். யார் சீனியர்?  நீங்கள் 2001-ல் தான் எம்எல்ஏ, நான் 1989-ல் எம்எல்ஏ. 1991-ல் சேலம் மாவட்ட செயலாளர். 1991-ல் மீண்டும் எம்எல்ஏ. 1998-ல் சீட்டு கேட்காமலே சேலம் எம்பி சீட் கொடுத்தார்கள்.  1998-ல் நான் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்.

ஓபிஎஸ்-காக பணியாற்றினோம் :

உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது நாங்கள் ஏற்றுக்கொண்டோம். உங்களோடு தோளோடு தோளாக நின்று பணியாற்றினோம். அதுவே அவருக்கு பதவி இல்லை என்று சொன்னால், யாரையும் ஏற்றுக்கொள்ள மாட்டார். கட்சியை பார்க்க மாட்டார். அவரை மட்டும் தான் பார்ப்பார். 2001இல் என்னுடைய தொகுதியை அம்மா (ஜெயலலிதா) கூட்டணிக்கு கொடுத்தார்கள். என்னை வேறு தொகுதியில் நிற்க சொன்னார்கள். நான் மறுத்து இதே தொகுதியில் அதிமுக கூட்டணிக்கு வேலை செய்தேன்.  இதுதான் கட்சி விசுவாசம். ஒன்றிய பொறுப்பு, மாவட்ட பொறுப்பு, எம்பி, எம்எல்ஏ, அமைச்சர் அதன்பிறகு தான் இந்த இடம். உழைக்கின்ற மக்களுக்கு கதவைத் தட்டி வாய்ப்பை கொடுக்கும் ஒரே கட்சி அதிமுக.” என பேசினார் எடப்பாடி பழனிச்சாமி.

Read Entire Article