ARTICLE AD BOX

கொல்கத்தா : கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் சமயத்தில் சில ரசிகர்கள் ஆர்வ மிகுதியில் மைதானத்தில் உள்ள பாதுகாப்பை மீறி தங்கள் ஆஸ்தான கிரிக்கெட் வீரரை பார்க்க மைதானத்திற்குள் சென்று விடுவார்கள். அப்போது ரசிகர்கள் அவர்களின் காலில் விழுவதும், பாசத்துடன் கட்டியணைக்க முயற்சிப்பதுமாக நெகிழ்ச்சி சம்பவங்கள் நிகழ்வதுண்டு.
இதுபோன்ற சம்பவங்கள் உள்ளூர் ஆட்டங்களில் குறிப்பாக ஐபிஎல் ஆட்டங்களில் நடைபெறுவதுண்டு. அப்படியான சம்பவம நேற்று கொல்கத்தாவில் நடைபெற்றுள்ளது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உடன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி மோதியது.
இதில், இரண்டாவது இன்னிங்சில் பெங்களூரு அணி விளையாடி கொண்டிருக்கும் போது, ஒரு ரசிகர் பாதுகாப்பை மீறி மைதானத்திற்குள் நுழைந்து விராட் கோலி காலில் விழுந்த சம்பவம் நிகழ்ந்தது.விராட் கோலி, RCB அணியின் முன்னாள் கேப்டனும் முக்கிய வீரருமானவர், இந்தப் போட்டியில் 36 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
கோலி 13வது ஓவரில் அரைசதம் (50 ரன்கள்) அடித்து முடித்த சமயத்தில் ஒரு இளம் ரசிகர் ஆர்வ மிகுதியில் பாதுகாப்பு வளையத்தை உடைத்துக் கொண்டு மைதானத்திற்குள் ஓடி வந்தார். அவர் நேராக கோலியை நோக்கி சென்று, அவரது கால்களில் விழுந்து வணங்கினார். அப்போது அங்கு பாதுகாப்பு ஊழியர்கள் உடனடியாக வந்துவிட்டனர்.
காலில் விழுந்த ரசிகரை எழுப்பி அன்போடு கட்டிபிடித்து தட்டிக்கொடுத்தார் விராட் கோலி. அதன் பிறகு பாதுகாப்பு அதிகாரிகள் அந்த ரசிகரை மைதானத்தை விட்டு வெளியேற்றினர். திரும்பி செல்கையில் தனது ஆஸ்தான வீரரை அருகில் நின்று பார்த்த சந்தோஷத்தில் சுற்றி இருந்த பார்வையாளர்களை நோக்கி மகிழ்ச்சியுடன் கையசைத்தவாறு அங்கிருந்து சென்றார்.
இந்த திடீர் நிகழ்வால் கோலி ஆரம்பத்தில் சற்று திகைத்தாலும், அமைதியாக இருந்து பாதுகாப்பு அதிகாரிகளை அழைத்து நிலைமையை கையாளச் சொன்னார். சமூக ஊடகங்களில் ரசிகரின் இந்த செயல் வைரலானது. ரசிகர்களிடையே கோலியின் காலில் விழுந்து வணங்கிய தருணம் வைரலாக பரவியது.
Bro deserves to meet Virat Kohli after these efforts https://t.co/8CPNtTC4rP pic.twitter.com/rG5R3t9EaH
— Nikhil (@TheCric8Boy) March 23, 2025