ARTICLE AD BOX
சென்னை: மே 5ல் வணிகர் அதிகாரப் பிரகடன மாநாட்டின் முன்னோட்டமாக மாநாட்டின் கொள்கைகளை வலியுறுத்தும் பிரச்சார வாகனத்தை விக்கிரமராஜா தொடங்கிவைத்தார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் 42வது வணிகர் தின மாநில மாநாடு செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் வரும் மே 5ம் தேதி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்புடன் நடைபெற இருக்கின்றது. வணிகர் அதிகாரப் பிரகடன மாநாடாக நடக்க இருக்கும் இம்மாநாடு, தமிழக வணிகர்கள் மட்டுமல்லாது, அகில இந்திய வணிக சமுதாயத்திற்கு மாபெரும் சக்தியை அளிக்கும் மாநாடாக விளங்கும் என பேரமைப்பு தெரிவிக்கிறது.
இதற்கான முன்னேற்பாடுகளாக வருகின்ற ஏப்ரல் 5ம் தேதி வணிகர் கொடியேற்றத்துடன் மாநாட்டு பந்தல் காள்கோல் விழாவும், மாநாட்டு பந்தல் அமைப்புக்கான தொடக்க விழாவும், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வணிக நிர்வாகிகள் மற்றும் அனைத்து தொழில் வணிக சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகிகள் பங்கேற்புடன் நடைபெற உள்ளது. முன்னோட்டமாக மாநாட்டின் கொள்கைகளையும், வணிகர்களின் நிலைப்பாட்டையும், அடையாளப்படுத்துவதற்கான அவசியத்தையும் பிரச்சார வாகனம் மூலம் அனைத்து வணிக சொந்தங்களுக்கும் கொண்டு சேர்த்திட, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத்தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா பிரச்சார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாநாட்டு வளாகத்திலேயே அலுவலகத்தையும் திறந்து வைத்தார்.
The post மே 5ல் வணிகர் அதிகாரப் பிரகடன மாநாடு பிரச்சார வாகனத்தை தொடங்கி வைத்தார் விக்கிரமராஜா appeared first on Dinakaran.