ARTICLE AD BOX
Senior Citizens Savings Scheme: மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) என்பது ஒரு அரசாங்க சேமிப்புத் திட்டமாகும்.
மூத்த குடிமக்களுக்கான பாதுகாப்பான முதலீட்டுத் திட்டங்களில் தபால் அலுவலக மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) ஒரு சிறந்த தேர்வாக கருதப்படுகின்றது.
இது மூத்த குடிமக்களுக்கு பாதுகாப்பான மற்றும் நிலையான வருமானத்தை வழங்குகிறது.
இதன் மூலம் உத்தரவாதமான வருமானத்தைப் பெற முடியும். இந்தத் திட்டத்தில் 8.2% வட்டி விகிதம் கிடைக்கிறது. இது உங்கள் கணக்கில் ஒவ்வொரு காலாண்டிலும் டெபாசிட் செய்யப்படும். இந்தத் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் வழக்கமான வருமானத்திற்கும் ஏற்பாடு செய்ய முடியும்.
SCSS திட்டம் எவ்வாறு செயல்படுகிறது? இதன் மூலம் மாதா மாதம் நல்ல வருமானம் பெற என்ன செய்ய வேண்டும்? இவை குறித்து இந்த பதிவில் காணலாம்.
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) என்பது ஒரு அரசாங்க சேமிப்புத் திட்டமாகும். இது மூத்த குடிமக்களுக்கு பாதுகாப்பான மற்றும் நிலையான வருமானத்தை வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், தபால் அலுவலகத்தில் மட்டுமல்லாமல், அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளிலும் கணக்கைத் திறக்கலாம்.
இந்தத் திட்டத்தில் செய்யப்படும் முதலீட்டிற்கு அரசாங்கத்தால் உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. ஆகையால் எந்த ஆபத்தும் இல்லாத திட்டமாக இது பார்க்கப்ப்படுகின்றது.
SCSS Account: SCSS கணக்கின் முக்கிய அம்சங்கள்
- முதலீட்டு காலம்: 5 ஆண்டுகள் (3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் வசதி உள்ளது)
- வட்டி விகிதம்: ஆண்டுக்கு 8.2% (வட்டி 3 மாதங்களுக்கு ஒரு முறை செலுத்தப்படும்)
- குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை: ரூ. 1000
- அதிகபட்ச முதலீடு: ரூ. 30 லட்சம்
- வரிச் சலுகைகள்: பிரிவு 80C இன் கீழ் ரூ. 1.5 லட்சம் வரையிலான முதலீட்டிற்கு வரி விலக்கு
SCSS கணக்கை யார் திறக்கலாம்?
- 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்களும் SCSS இல் தங்கள் கணக்கைத் திறக்கலாம்.
- தன்னார்வ ஓய்வூதியத் திட்டத்தின் (VRS) கீழ் ஓய்வு பெற்ற 55 முதல் 60 வயது வரையிலான அரசு ஊழியர்களும் இந்தத் திட்டத்தில் கணக்கைத் திறக்கலாம்.
- ஓய்வூதியப் பலன் பெற்ற 1 மாதத்திற்குள் இந்தத் திட்டத்தில் அந்தத் தொகையை முதலீடு செய்வதானால், 50 வயது அல்லது அதற்கு மேற்பட்ட ஓய்வு பெற்ற பாதுகாப்பு ஊழியர்களும் SCSS இல் கணக்கைத் திறக்கலாம்.
- NRI இந்தத் திட்டத்தின் கீழ் கணக்கைத் திறக்க அனுமதிக்கப்படுவதில்லை.
SCSS திட்டத்தில் எத்தனை கணக்குகளைத் திறக்க முடியும்?
- SCSS திட்டத்தில், நீங்கள் ஒரு கணக்கில் அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம்.
- கணவன் - மனைவியின் கூட்டுக் கணக்கிலும் அதிகபட்சமாக ரூ.30 லட்சம் டெபாசிட் செய்யலாம்.
- ஆனால் கணவன் - மனைவி தனித்தனி கணக்குகளைத் திறந்தால், இருவரும் மொத்தம் ரூ.60 லட்சம் வரை முதலீடு செய்ய முடியும்.
- இந்தத் திட்டம் 5 ஆண்டுகளுக்கானது.
- எனினும், அதை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கலாம்.
ஒவ்வொரு மாதமும் எவ்வளவு வருமானம் கிடைக்கும்?
SCSS இல் முதலீடு செய்வதில், ஒவ்வொரு காலாண்டிலும் (மூன்று மாதங்களுக்கு ஒரு முறை) முதலீட்டாளர்களுக்கு வட்டி வழங்கப்படும். இந்த திட்டத்தின் மூலம் மாதாந்திர வருமானத்திகான ஏற்பாட்டை செய்ய விரும்பினால், உங்கள் தேவைக்கேற்ப வட்டியை நிர்வகிக்கலாம்.
அதிகபட்சமாக ரூ.30 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு வருமானம் கிடைக்கும்?
- முதலீடு செய்யப்பட்ட தொகை: ரூ.30 லட்சம்
- ஆண்டு வட்டி விகிதம்: 8.2%
- காலாண்டு வட்டி: ரூ.60,150
- மாத வருமானம்: ரூ.20,050
இதன்படி, ரூ.30 லட்சம் முதலீடு செய்தால், 5 ஆண்டுகளில் வட்டியாக மட்டும் மொத்தம் ரூ.12.03 லட்சம் கிடைக்கும்.
கணவன்-மனைவி இருவரும் SCSS கணக்குகளைத் திறந்தால், இந்தத் திட்டத்தில் தனித்தனியாக ரூ.30 லட்சம் டெபாசிட் செய்யலாம். இது அவர்களின் மாத வருமானத்தை ரூ.40,100 ஆக அதிகரிக்கும்.
SCSS கணக்கை முன்கூட்டியே மூட முடியுமா?
தேவைப்பட்டால், முதிர்வுக்கு முன்பே SCSS கணக்கை மூடலாம். எனினும், இதற்கு சில நிபந்தனைகள் உள்ளன:
- நீங்கள் 1 வருடத்திற்கு முன்பு கணக்கை மூடினால், வட்டி எதுவும் செலுத்தப்படாது. மேலும் வட்டி ஏற்கனவே செலுத்தப்பட்டிருந்தால், அது அசல் தொகையிலிருந்து கழிக்கப்படும்.
- 1 முதல் 2 ஆண்டுகளுக்குள் கணக்கை மூடினால், தொகையில் 1.5% அபராதமாக கழிக்கப்படும்.
- 2 முதல் 5 ஆண்டுகளுக்குள் கணக்கை மூடினால், தொகையில் 1% அபராதமாக கழிக்கப்படும்.
- 5 ஆண்டுகள் முடிந்த பிறகு, நீட்டிக்கப்பட்ட கணக்கு 1 வருடத்திற்குப் பிறகு மூடப்பட்டால் எந்த அபராதமும் விதிக்கப்படாது.