ARTICLE AD BOX
கோவை: கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்தூர், ஆலாந்துறை, மத்வராயபுரம், வெள்ளிமலைப்பட்டணம், போளுவாம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் செங்கல் சூளைகளுக்காக செம்மண் தோண்டி எடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. கோர்ட் அதிரடியாக தலையிட்டு செம்மண் விவகாரம் தொடர்பாக முறையாக விசாரிக்க அறிவுறுத்தியது. தடாகம், சோமையனூர், சோமையம்பாளையம் வட்டாரங்களில் முறைகேடாக செம்மண் எடுத்து செங்கல் சூளைகள் நடத்தப்பட்டு வந்தது. இந்த செங்கல் சூளைகள் மூடப்பட்ட நிலையில், தொண்டாமுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராங்களில் சிலர் பட்டா நிலங்களிலும், அரசு புறம்போக்கு நிலங்களிலும் ஜேசிபி, பொக்லைன் மூலமாக மண் தோண்டி எடுத்து கடத்தி வந்துள்ளனர். பல மாதங்களில் இரவு பகலாக இந்த மண் கடத்தல் நடந்திருப்பதாக தெரிகிறது.
இந்த செம்மண் முறைகேடு விவகாரத்தை போலீசார், வருவாய்த்துறையினர், கனிம வளத்துறையினர் கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில், புகார் அதிகமானதை தொடர்ந்து விசாரணை தீவிரமாக்கப்பட்டது. கனிம வளத்துறையினர் சமீபத்தில் டிரோன் சர்வே நடத்தி முடித்தனர். சில இடங்களில் 3.5 மீட்டர் வரை மண் தோண்டி எடுக்கப்பட்டிருப்பதாக தெரியவந்தது. வெள்ளிமலைப்பட்டணம் உள்ளிட்ட சில கிராமங்களில் அதிகளவு மண் தோண்டி எடுக்கப்பட்டது. இதுவரை நடந்த ஆய்வில் 280க்கும் மேற்பட்ட குழிகளில் மண் வெட்டி எடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. மண் தோண்டி எடுத்தவர்கள் யார், தோண்டி எடுத்த செம்மண் எங்கே கொண்டு செல்லப்பட்டது, இதற்கு உடந்தையாக இருந்த அரசு துறை அதிகாரிகள் யார் யார், தனி நபர்கள் யார்? என்ற விவரங்களையும் சேகரித்து வருகின்றனர். மண் தோண்டி எடுக்கப்பட்ட இடங்களில் நடந்த ஆய்வில் தரமான செம்மண் தோண்டப்பட்டதால் சில இடங்கள் பள்ளதாக்கு போல் மாறியிருப்பது தெரியவந்தது.
மண் தோண்டப்பட்ட பட்டா இடங்கள் யார் பெயரில் இருந்தது?, மண்ணை வெட்டி எடுத்தது யார்? என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் தொடர்ந்து தாமதம் செய்து வருவதாக தெரிகிறது. குறிப்பாக வருவாய்த்துறை அலுவலகத்தில் இருந்து பட்டா உரிமையாளர்கள், மண் எடுத்தவர்கள் பட்டியல் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இடத்தை துல்லியமாக கண்டறிய பிரத்யேக செயலிகள் வந்துவிட்டது. இருந்தபோதிலும் இட உரிமையாளர்களை கண்டறிந்து சட்ட ரீதியான நடவடிக்கை தாமதமாகி வருவதாக தெரிகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி முறைகேடாக மண் எடுத்தவர்கள் தலைமறைவாகி விட்டார்கள். மேலும் இந்த விவகாரத்தை தொடர்ந்து தாமதம் செய்து விசாரணையில் இருந்து தப்பிக்கவும் சிலர் முயற்சி செய்து வருகின்றனர்.
முறைகேடாக மண் எடுத்தவர்களுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கையும் தாமதமாகி வருகிறது. வருவாய்த்துறை, கனிம வளத்துறை, போலீசார் துரிதமாக செயல்பட்டு முறைகேடு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது. மண் தோண்டி எடுத்தவர்கள் யார், தோண்டி எடுத்த செம்மண் எங்கே கொண்டு செல்லப்பட்டது, இதற்கு உடந்தையாக இருந்த அரசு துறை அதிகாரிகள் யார் யார், தனி நபர்கள் யார்? என்ற விவரங்களையும் சேகரித்து வருகின்றனர்
பல கோடி ரூபாய் மண் கடத்தல்
தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான செம்மண் வெட்டி கடத்தப்பட்டிருக்கிறது. இந்த செம்மண் கடத்தியவர்களுக்கு உரிய அபராதம் விதிக்க வேண்டும். ஆனால் இப்போது வரை ஒரு கிராமத்தில் மட்டுமே மண் எடுத்த அளவு விவரங்கள் கண்டறியப்பட்டது. அபராத தொகையும் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. மண் எடுத்தவர்கள் அரசியல் கட்சியினர் மூலமாக அபராத தொகையை குறைக்கவும், சட்ட நடவடிக்கையில் இருந்து தப்பவும் முயற்சித்து வருவதாக தெரிகிறது. சம்பந்தப்பட்ட துறையினர் இந்த விவகாரத்தில் தீவிரம் காட்டி விசாரிக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post முறைகேடாக செம்மண் எடுத்தவர்கள் மாயம்: பட்டா குளறுபடியால் விசாரணை தாமதம் appeared first on Dinakaran.