முயலும் ஆமையும் நமக்கு கற்றுத் தரும் முதலீட்டுப் பாடம் என்ன?

2 hours ago
ARTICLE AD BOX

முதலீட்டிற்கு மூன்று கூறுகள் உண்டு.

1. வளரும் விகிதம் (rate of return)

2. நீர்ப்புத் தன்மை (liquidity)

3. பணத்தை இழக்கும் அபாயம் (risk)

இவை முதலீட்டிற்கு முதலீடு மாறுபடும். எனவே நமது குறிக்கோளுக்கு ஏற்ற முதலீட்டை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும்.

உதாரணமாக,

பங்குச்சந்தையில் வளரும் விகிதம் அதிகம். நீர்ப்புத்தன்மை அதிகம். பணத்தை இழக்கும் அபாயம் அதிகம்.

வைப்பு நிதிகளில் வளரும் விகிதம் குறைவு. நீர்ப்புத்தன்மை அதிகம். பணத்தை இழக்கும் அபாயம் குறைவு.

இதையும் படியுங்கள்:
அபாயங்கள் அறிந்து முதலீடு செய்வோம்!
Hare and Tortoise Race

குறிக்கோளின் காலவரையறைக்கு ஏற்ப சரியான முதலீடுகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.‌ நீண்ட காலக் குறிக்கோள்களுக்கு (>10 ஆண்டுகள்) பங்குச்சந்தை முதலீடுகள் சிறப்பானவை. குறுகிய காலக் குறிக்கோள்களுக்கு வைப்பு நிதிகள் சிறப்பானவை.

இதனைக் குறித்த ஓர் ஈசாப் கதையைப் பார்ப்போம்.

ஓர் ஆமை மெதுவாக நடந்து சென்று கொண்டிருந்தது. அதன் சிறிய கால்கள் மற்றும் மெதுவான நடை போன்றவற்றை ஒரு முயல் கேலி செய்தது.

"ஹா ஹா. முயலே! நீ காற்றைப் போல் வேகமாக ஓடலாம். ஆனால், ஓட்டப் பந்தயம் வைத்தால் நான் உன்னைத் தோற்கடித்து விடுவேன்," என்றது ஆமை.

ஆமை சொல்வது நடக்க முடியாது என்று நினைத்த முயல், ஓட்டப்பந்தயத்திற்கு சம்மதித்தது. ஒரு நரி இதற்கு நடுவராக தேர்வு செய்யப்பட்டது. நரி ஓடுகளத்தை மற்றும் வெற்றிக்கோட்டைத் தேர்வு செய்தது.

ஓட்டப்பந்தயத்தில் ஆமையும் முயலும் சேர்ந்து ஓடத் தொடங்கின. ஆமை நேரத்தை வீணாக்காமல் ஒவ்வொரு நொடியும் தனது குறிக்கோளினை நோக்கிச் சென்றது. முதலில் வேகமாக ஓடிய முயல் முக்கால்வாசி தூரம் சென்ற பிறகு தன்னுடைய வேகத்தில் கொண்ட நம்பிக்கையினால் சாலையோரம் சற்று ஓய்வெடுக்கப் படுத்தது. அப்படியே தூங்கி போனது‌.

மெதுவாக சீராக சென்ற ஆமை முயலைத் தாண்டிச் சென்று வெற்றிக் கோட்டைத் தொட்டது. தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்ட முயலானது, எவ்வளவு வேகமாக முடியுமோ அவ்வளவு வேகமாக ஓடி வெற்றிக் கோட்டைத் தொட்ட போது, அங்கு ஆமை ஏற்கனவே வெற்றி பெற்று விட்டிருந்தது.

இந்தக் கதையில் முயலானது பங்குச்சந்தையைப் போன்றது. வெகு வேகமாக வளரும் பங்குச்சந்தை, முயல் ஓய்வெடுத்ததைப் போல திடீரென மந்தமாகலாம். கிபி 2008, கிபி 2020 ஆண்டுகளில் பங்குச் சந்தை மந்தமானது.‌ அது மறுபடியும் எப்பொழுது வேகமாக ஓடத் துவங்கும் என்று கூறுவது இயலாது.‌ மறுபடியும் வேகமாக ஓடத்துவங்கி வெற்றிக்கோட்டை எப்பொழுது தொடும் என்று கணிக்க இயலாது.‌

இதையும் படியுங்கள்:
பணத்தைப் பரவலாக முதலீடு செய்வதன் அவசியம் என்ன தெரியுமா?
Hare and Tortoise Race

ஆமை என்பது வைப்பு நிதியைப் போன்றது. எப்பொழுதும் மெதுவாக ஓடினாலும் சீராக ஓடும்.‌ வெற்றிக்கோட்டை நிச்சயமாக குறிப்பிட்ட காலவரையறையில் தொட்டு விடும். ஆனால் சற்று மெதுவாகச் சென்று தொடும்.

நீண்ட காலக் குறிக்கோள்களுக்கு பங்குச்சந்தை முதலீடானது சிறப்பானது. அது முயல் எவ்வாறு ஆரம்பத்தில் வேகமாக ஓடி வெற்றிக் கோட்டிற்கு அருகில் சென்று விட்டதோ அதேபோன்று பங்குச்சந்தையானது வெகு வேகமாக வளர்ந்து நமது நிதி குறிக்கோளுக்கு (அடைய வேண்டிய தொகை) அருகில் நமது முதலீட்டைக் கொண்டு செல்லும். ஆனால், இவ்வளவு நேரம் வேகமாக ஓடிய முயல் திடீரென ஓய்வெடுக்க நினைக்கலாம். அப்பொழுது நமது முதலீடு வளராமல் அங்கேயே நின்று விடும். அல்லது அளவில் குறையலாம்.‌ முதலீட்டின் கால வரையறைக்கு நாம் நெருங்கி வரும் பொழுது, மறுபடியும் முயல் ஓடும் வரை நாம் காத்திருப்பது உசிதமல்ல. முதலீட்டின் காலவரையறை முடிந்த போது முயல் தூங்கிக் கொண்டிருந்தால், முதலீட்டை பணமாக்கும் போது நாம் பெரும் நஷ்டத்தைச் சந்திக்க நேரிடும்.

முதலீட்டின் கால வரையறை நெருங்கும் சந்தர்ப்பங்களில் நாம் நமது முதலீட்டை முயலில் இருந்து ஆமைக்கு மாற்றி விட வேண்டும். மெதுவாக சென்றாலும் வெற்றிக் கோட்டை குறிப்பிட்ட காலவரையறையில் ஆமை தொட்டு விட முடியும் என்பது நிச்சயம்.

உதாரணமாக நாம் நமது ஓய்வு காலத்திற்காக, 60 வயதில் ஓய்வு பெறுவதற்காக குறிப்பிட்ட தொகையைப் பெருக்க எண்ணி, இளம் வயதிலேயே பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகளில் ஈடுபட்டிருக்கலாம். நமக்கு 53, 54 வயதாகும் பொழுது ஓய்வு காலக் குறிக்கோள் தொகைக்கு அருகில் வந்துவிட்டால் அப்பொழுது பங்குச்சந்தையில் இருந்து வெளியேறி முழுவதும் வைப்பு நிதிகள் சார்ந்த முதலீட்டுக்கு மாறிவிட வேண்டும். இதுவரை முயலைப் போல் வேகமாக ஓடிய பங்குச் சந்தை இனிமேல் வேகமாக ஓடும் என்ற உத்தரவாதம் கிடையாது. அப்பொழுது நமது முதலீடுகளை ஆமை போன்ற வைப்பு நிதிகளுக்கு மாற்றிக் கொள்ள வேண்டும். ஆமை மெதுவாக சென்றாலும் அறுபதாவது வயதில் நமது ஓய்வு காலத்திற்கான நிதிக்குறிக்கோளை அடைந்து விடும்.

நீண்ட காலக் குறிக்கோள்களுக்கு முயல் சிறப்பானது. குறுகிய காலக் குறிக்கோள்களுக்கு ஆமை சிறப்பானது. குறிக்கோளுக்கு ஏற்ற முதலீட்டைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

Read Entire Article