ARTICLE AD BOX
மத்திய அரசின் இந்தி திணிப்பு முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொள்ளாச்சி ரயில் நிலைய பெயர்ப் பலகையில் உள்ள இந்தி எழுத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசு புதிய கல்விக்கொள்கையை கொண்டு வந்துள்ளது. மும்மொழிக் கொள்கையை உள்ளடக்கியதாக இருந்ததால் இந்த புதிய கல்விக்கொள்கையை ஏற்கமாட்டோம் என்று தமிழ்நாடு அரசு உறுதிப்படத் தெரிவித்து வருகிறது.
இதனால் மத்திய அரசின் ஒருங்கிணைந்த கல்வித்திட்டத்துக்காக (சமக்ர சிக்ஷா அபியான்) தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ரூ.2 ஆயிரத்து 152 கோடியை மத்திய அரசு ஒதுக்கவில்லை. இந்த நிதியை ஒதுக்குமாறு தமிழக அரசு சார்பில் பலமுறை மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
மத்திய அரசும்-தமிழ்நாடு அரசும் தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ள நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், 'புதிய கல்விக் கொள்கையை அமல் படுத்தாவிட்டால் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிதியை ஒதுக்க முடியாது' என்று அறிவித்தார். இவரின் இந்த அறிவிப்புக்கு தமிழ்நாட்டில் கடுமையான எதிர்ப்புகள் எழுந்துள்ளன. மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக பாஜக தவிர்த்த மற்ற அரசியல் கட்சியினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
இந்நிலையில் பொள்ளாச்சி ரெயில் நிலைய பெயர் பலகையில் உள்ள இந்தி எழுத்துகளை தி.மு.க.வினர் கருப்பு மை பூசி அழித்தனர். இந்தி திணிப்பு, மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தி எழுத்துகள் அழிக்கப்பட்டது.
தமிழகத்துக்கான கல்வி நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்திருப்பதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ரயில் நிலைய பெயர் பலகையில் உள்ள இந்தி எழுத்துகளை தி.மு.க.வினர் கருப்பு மை பூசி அழித்துள்ளனர்.