ARTICLE AD BOX
புதுடெல்லி: மும்மொழி கொள்கையை தமிழ்நாடு, கேரளா மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் அமல்படுத்த கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள தேசிய கல்வி கொள்கை 2020ன்படி மும்மொழி பாடத்திட்ட கொள்கையை அனைத்து மாநில அரசுகளும் ஏற்று அமல்படுத்தி வருகிறது. குறிப்பாக தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து, ஏற்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மும்மொழி கொள்கையை எந்த ஒரு காலத்திலும் ஏற்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பாஜக வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி, சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு, கேரளம், மேற்குவங்கம் உள்ளிட்ட அரசுகளுக்கு எதிராக பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ‘தேசிய கல்வி கொள்கை என்பது அனைத்து தரப்பு மாணவர்களின் பள்ளி கல்வி தரத்தை மேம்படுத்தவும், அனைத்து இந்திய மொழிகளையும் ஏழை எளிய பட்டியல், பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினை சார்ந்த பள்ளி குழந்தைகள் இலவசமாக கற்க வேண்டும் என்ற நோக்கத்தோடும் ஒன்றிய அரசால் கொண்டு வரப்பட்ட கல்விக் கொள்கை திட்டமாகும்.
இதனை அரசியல் காரணங்களுக்காக தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநில அரசுகள் ஏற்க மறுக்கின்றன. மேலும் ஒன்றிய அரசு கொண்டுவரும் சட்ட திட்டம் அனைத்து மாநில அரசுகளுக்கும் பொருந்துவது என்பது மட்டுமில்லாமல், அத்தகைய கொள்கையை அமல்படுத்த வேண்டியது மாநில அரசின் கடமையாகும். இலவச கல்வி என்பது அரசியலமைப்பு கொடுத்துள்ள அடிப்படை உரிமை. இந்த திட்டத்தை ஏற்க மறுப்பதினால் மாநில அரசு, சம்பந்தப்பட்ட பள்ளி குழந்தைகளின் அடிப்படை உரிமையான இலவச கல்வியை மறுக்கும் செயல்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post மும்மொழி கொள்கை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் appeared first on Dinakaran.