மும்மொழி கல்வி கொள்கையில் பாஜ மட்டுமே தனித்து நிற்கிறது: அண்ணாமலை விரக்தி

3 days ago
ARTICLE AD BOX

சேலம்: பாஜ மாநில தலைவர் அண்ணாமலை நேற்று சேலத்தில் கட்சி நிர்வாகியின் இல்ல திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் தனியார் பள்ளியில் 56 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். அரசு பள்ளியில் 52 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். சிபிஎஸ்இ பள்ளியை பொறுத்த வரை 200 பள்ளியாக இருந்த நிலையில் 2025ல் 2,010 பள்ளிகளாக உள்ளன. அரசு பள்ளியில் படிக்கின்ற மாணவர்களை விட தனியார் பள்ளியில் படிக்கின்ற மாணவர்கள் மற்றும் பள்ளிகளின் வளர்ச்சி அதிகமாக உள்ளது.

மும்மொழி கல்வி கொள்கை குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் கருத்துகளை கூறுகிறார்கள். ஏகமனதாக ஒரே பக்கமாக எல்லா அரசியல் கட்சிகளும் இருக்கிறது. பாஜ மட்டுமே தனித்து நிற்கிறது.
தவெக தலைவர் விஜய், சிபிஎஸ்இ பள்ளி நடத்துகிறார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், சென்னை வேளச்சேரியில் சிபிஎஸ்இ பள்ளி நடத்தி வருகிறார். சமூக வலைதளங்களில் ஆபாசமான விஷயங்கள் செல்போன் வழியாக வாசலை தாண்டி வந்து அமர்ந்துள்ளது. நல்லது பேசுவதற்கான நேரம் இல்லாமல் போய்விட்டது.

பெற்றோர்களுக்கு குழந்தைகள் பற்றி கண்காணிப்பு இல்லை. சமுதாயத்தில் காவல்துறையினரால் தடுக்க முடியாத குற்றங்களும் அதிகரித்துள்ளது. இதற்கு காவல்துறையினரை குறை கூறக்கூடாது. பெற்றோர்கள் குழந்தைகளை முறையாக கண்காணிக்க வேண்டும். அடுத்த வாரம் சென்னைக்கு செல்கிறேன். அண்ணா சாலையில் எந்த இடம், நாள் மற்றும் தேதியை திமுக குறிக்க வேண்டும். அந்த இடத்துக்கு தனிஆளாக வருகிறேன். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

 

The post மும்மொழி கல்வி கொள்கையில் பாஜ மட்டுமே தனித்து நிற்கிறது: அண்ணாமலை விரக்தி appeared first on Dinakaran.

Read Entire Article