ARTICLE AD BOX
உலகம் முழுவதும் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அதிலும் ஆன்லைன் உலகைச் சொல்லவே வேண்டாம். குற்றங்களுக்குப் பஞ்சம் இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. குற்றம் செய்பவர்கள் புதுப்புது யுக்தியினை கையாண்டு மக்களை ஏமாற்றி பணம் பறித்து வருகின்றனர். அந்த வகையில், டிஜிட்டல் அரெஸ்ட்டும் ஒன்றாக இருக்கிறது. அதன்படி, மும்பையைச் சேர்ந்த ஒரு மூதாட்டிக்கு வந்த மோசடி தொலைபேசி அழைப்பால், அவர் 20 கோடி ரூபாயை இழந்துள்ளார்.
மும்பையைச் சேர்ந்த 86 வயது மூதாட்டி ஒருவருக்கு, கடந்த வருடம் டிசம்பர் மாதம் 26-ஆம் தேதி தொலைபேசி வழியாக அழைப்பு ஒன்று சென்றுள்ளது. அதில் பேசியவர், ’தான் ஒரு போலீஸ்காரர்’ என அறிமுகப்படுத்திக்கொண்டு, ”உங்களுடைய (மூதாட்டி) ஆதார் எண்ணைப் பயன்படுத்தி தொடங்கப்பட்ட ஒரு வங்கிக் கணக்கிலிருந்து சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பணம் அனுப்பப்பட்டுள்ளது, ஆகையால் உங்கள் மீதும், குடும்பத்தினர் மீதும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவுள்ளோம். ஆகையால், இவ்வழக்கை தீர்க்க வேண்டுமானால், நாங்கள் சொல்லும் வங்கிகளுக்கு உங்கள் பணத்தை மாற்ற வேண்டும்” என அவர் கூறியுள்ளார்.
இப்படியே மார்ச் மாதம் வரை அவ்வப்போது மிரட்டி, மூதாட்டியிடம் ரூ.20 கோடியே 25 லட்சம் வரை பணத்தை பறித்துள்ளனர். தொடர்ந்து, ஒருகட்டத்தில் அது ஒரு மோசடி என்பதை உணர்ந்த மூதாட்டி, காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அதைத் தொடர்ந்து விசாரணையில் இறங்கிய காவல் துறையினர், மோசடி பேர்வழிகள் அளித்த வங்கிக் கணக்குகளை வைத்து, அவர்களை தட்டித் தூக்கியுள்ளனர். இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.