ARTICLE AD BOX
மும்பையிலிருந்து சென்னைக்கு வரும் இரயில்வண்டிகள் தென்தமிழகத்திற்கு போவதில்லை; ஆகவே மும்பை - சென்னை விரைவு வண்டியை (22159) நெல்லைவரை நீட்டிக்க வேண்டும் என்று வி.சி.க. தலைவர் திருமாவளவன் மக்களவையில் கோரிக்கை வைத்தார்.
நாடாளுமன்ற மக்களவையில் இரயில்வே துறை மானிய கோரிக்கை விவாதத்தில் பேசியபோது அவர் இதை வலியுறுத்தினார்.
அவர் மேலும் பேசியது:
“ பத்திரிகையாளர்கள் அகில இந்திய அளவில் 3000க்கும் மேற்பட்டவர்கள் concession என்கிற சலுகையோடு பயணித்து வந்தார்கள். 60 வயதுக்கு மேலான மூத்தவர்களும் அந்த சலுகையை பெற்று வந்தார்கள். அந்த சலுகைகளை மீண்டும் வழங்க வேண்டும்.
தென்னிந்திய மாநிலங்களை இணைக்க கடிய வகையில் சரக்கு வாகனங்களுக்கான பிரைட் காரிடார் freight corridor என்கிற தனிப் பாதையை உருவாக்க வேண்டும்.
விமானத்தில் பயண சீட்டு பதிவு செய்கிற போது நேரத்திற்கு தகுந்த மாதிரி டயனமிக் பிரைசிங் dynamic pricing அந்த கட்டணத்தை உயர்த்துகிற நடவடிக்கை உள்ளது. அதுபோல ரயிலிலும் டயனமிக் பிரைசிங் Dynamic pricing என்பது நடைமுறையில் இருக்கிறது. அதனை முற்றாக கைவிட வேண்டும். பிக்சட் ரேட் Fixed Rate என்கிற பழைய நடைமுறையே இருக்க வேண்டும்.
குறிப்பாக ராஜதானி, சதாப்தி, டுரோண்டா எக்ஸ்பிரஸ் போன்றவற்றில் இப்போது இது நடைமுறையில் இருக்கிறது. இதனால் எளிய மக்கள் பயன்பெற முடியாத நிலை இருக்கிறது.
இரயில்வே சொத்துக்களை விற்பனை செய்வது தனியாருக்கு தாரைவார்ப்பது போன்ற நடவடிக்கைகளில் இரயில்வே துறை ஈடுபட்டு வருகிறது. அவ்வாறு செய்கிறபோது மாநில அரசுகளின் கருத்தைக் கேட்பதில்லை. இரயில்வே துறைக்கு இடம் கொடுப்பது மாநில அரசு தான். அது மாநிலங்களுக்கான சொத்து. ஆகவே அதை விற்பனை செய்யக்கூடிய நிலை வந்தால் மாநில அரசின் ஒப்புதலைப் பெறவேண்டும். அல்லது மாநில அரசுக்கே மலிவுவிலையில் கொடுக்க வேண்டும். மாநில அரசு அதை ஏற்க இயலாது என்ற நிலை வந்தால். அதை விற்கிறபோது மாநில அரசுக்கு உரிய பங்கை தர வேண்டும்.
மும்பை போன்ற அயல் மாநிலங்களில் வசிக்ககக்கூடிய தமிழர்கள் தமிழ்நாட்டுக்கு அடிக்கடி பயணம் செய்யக்கூடியவர்களாக இருக்கிறார்கள். மும்பை வாழ் தமிழர்கள் முக்கியமான இரண்டு விரைவு வண்டிகளுக்கான நீட்டிப்பை வலியுறுத்துகிறார்கள். மும்பையிலிருந்து சென்னை வருகிற ரயில்கள் தென்தமிழகத்திற்கு போவதில்லை. ஆகவே மும்பை சென்னை விரைவு வண்டியை (22159) நெல்லைவரை நீட்டிக்க வேண்டும்.
அதேபோல் 22113 மும்பையிலிருந்து கொச்சிவரை செல்கிற விரைவு ரயிலை நாகர்கோவில்வரை நீட்டிக்க வேண்டும். அதேபோல் எனது தொகுதியில் பரங்கிப்பேட்டை கடற்கரைத் துறைமுகம் கொண்ட ஒரு நகரம். அதற்கு முக்கியமான நான்கு இரயில்வண்டிகள் 20605, 20606, 17407, 17408 16179, 16180, 16770, 16780 இந்த வண்டிகள் பரங்கிப்பேட்டையில் நின்று செல்வதற்கு ஆவண செய்யவேண்டும். அங்கே 23 ரயில் பெட்டிகள் நிற்கிற அளவுக்கு நடைமேடையை நீட்டிக்க வேண்டும். பரங்கிப்பேட்டை ரயில் நிலையத்தின் தரத்த உயர்த்த வேண்டும்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் திருச்செந்தூர் விரைவு ரயிலை பூதலூரில் நின்று செல்ல ஆவன செய்ய வேண்டும்,” என்று திருமாவளவன் பேசினார்.