ARTICLE AD BOX
அசாமில் முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த 71 வயது தாத்தாவுக்கும், 65 வயது பாட்டிக்கும் காதல் மலர்ந்ததை அடுத்து, இருவருக்கும் முறைப்படி திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
வடகிழக்கு மாநிலமான அசாமின் கோலாகாட் மாவட்டத்தில் உள்ள போககாட்டைச் சேர்ந்தவர் பத்மேஷ்வர் கோலா (71). வீட்டு வேலைகளை செய்து வந்த இவர், காதல் தோல்வி காரணமாக திருமணம் செய்யாமலேயே வாழ்ந்து வந்தார்.
தன் இறுதி நாட்களை முதியோர் இல்லத்தில் கழிக்க விரும்பிய அவர், இரு ஆண்டுகளுக்கு முன், குவஹாத்தியின் பெல்டோலா பகுதியில் செயல்படும் பிரமோத் தாலுக்தார் நினைவு இல்லத்துக்கு வந்து சேர்ந்தார்.
அதேபோல், சோனித்பூர் மாவட்டம் தேஜ்பூரைச் சேர்ந்த ஜெயபிரபா போரா (65), சிறு வயது முதலே இரு சகோதரர்களுக்காக திருமணம் செய்யாமலேயே வாழ்ந்து வந்தார்.
அவர்களின் மறைவுக்கு பின், கடந்த ஆண்டு ஜனவரியில் பிரமோத் தாலுக்தார் முதியோர் இல்லத்தில் ஜெயபிரபா தஞ்சமடைந்தார்.
அங்கு, கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடந்த கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பத்மேஷ்வர், ஹிந்தி பாடல்களை பாடினார். இவர் பாடிய பாடல் மிகவும் பிடித்துவிட, பத்மேஷ்வர் குரலில் ஜெயபிரபா மயங்கினார்.
இறுதியில், தன் மனதையும் பறிகொடுத்தார். நாளடைவில் இருவரும் ஒருவரை ஒருவர் விரும்ப, திருமணம் செய்து கொள்வது குறித்த தங்கள் விருப்பத்தை முதியோர் இல்ல நிர்வாகிகளிடம் தெரிவித்தனர்.
தங்களை நம்பி வந்த இருவருக்கும் தடபுடலாக திருமணம் செய்ய முடிவு செய்த நிர்வாகிகள், இதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.
தாத்தா, பாட்டி இருவரும் அசாமைச் சேர்ந்தவர்கள் என்பதால், அம்மாநில முறைப்படி திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக, குவஹாத்தியின் மத்காரியாவில் உள்ள பெண்களுக்கான முதியோர் இல்லம் தேர்வு செய்யப்பட்டது.
திருமண ஏற்பாடுகளை முதியோர் இல்லத்தை நடத்தும் 'மோனாலிசா சொசைட்டி' என்ற தொண்டு நிறுவனம் ஏற்றுக் கொண்டது.
அசாம் பாரம்பரிய முறைப்படி அலங்கரிக்கப்பட்ட மேடையில் பத்மேஷ்வர் - ஜெயபிரபா இருவரின் திருமணம் சமீபத்தில் நடந்தது.
இதில், முதியோர் இல்லத்தில் உள்ளவர்கள் மட்டுமின்றி, குவஹாத்தி நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 1,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அனைவருக்கும் அறுசுவை உணவு பரிமாறப்பட்டது.