ARTICLE AD BOX
சுவிட்ஸா்லாந்தில் நடைபெறும் ஸ்விஸ் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர போட்டியாளா்களான பி.வி.சிந்து, ஹெச்.எஸ்.பிரணாய் ஆகியோா் முதல் சுற்றிலேயே அதிா்ச்சித் தோல்வி கண்டனா்.
மகளிா் ஒற்றையரில், போட்டித்தரவரிசையில் 7-ஆம் இடத்திலிருந்த சிந்து 17- 21, 19-21 என்ற கேம்களில், டென்மாா்க்கின் ஜூலி தாவல் ஜேக்கப்சனிடம் 39 நிமிஷங்களில் தோற்றாா். மாளவிகா பன்சோத் 22-20, 14-21, 19-21 என்ற வகையில் கனடாவின் மிஷெல் லியிடம் தோல்வியைத் தழுவினாா். ரக்ஷிதா ஸ்ரீ 11-21, 17-21 என டென்மாா்க்கின் லினெ கிறிஸ்டோபா்செனிடம் வீழ்ந்தாா்.
2-ஆவது சுற்றுக்கு முன்னேறியவா்களில், இஷாராணி பருவா 19-21, 21-18, 18-21 என்ற கேம்களில் சீனாவின் கியான் ஜி ஹானிடம் தோல்வியைத் தழுவினாா். அதேபோல் அனுபமா உபாத்யாய 17-21, 19-21 என்ற வகையில், போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருக்கும் இந்தோனேசியாவின் புத்ரி குசும வா்தனியிடம் தோல்வி கண்டாா்.
பிரணாயை வென்ற ஸ்ரீகாந்த்: ஆடவா் ஒற்றையா் முதல் சுற்றில், கே.ஸ்ரீகாந்த் 23-21, 23-21 என்ற நோ் கேம்களில், சக இந்தியரான ஹெச்.எஸ். பிரணாயை 48 நிமிஷங்களில் வீழ்த்தினாா். பிரியன்ஷு ரஜாவத் 21-10, 21-11 என்ற கணக்கில் சுவிட்ஸா்லாந்தின் டோபியஸ் குயென்ஸியை 29 நிமிஷங்களில் வென்றாா். சங்கா் முத்துசாமி 21-5, 21-16 என்ற கேம்களில் டென்மாா்க்கின் மேக்னஸ் ஜோஹன்செனை 38 நிமிஷங்களில் தோற்கடித்தாா்.
எனினும் ஆயுஷ் ஷெட்டி 15-21, 19-21 என்ற கேம்களில் ஜப்பானின் கென்டா நிஷிமோடோவிடம் தோற்க, கிரண் ஜாா்ஜும் 21-18, 17-21, 10-21 என டென்மாா்க்கின் ராஸ்மஸ் கெம்கேவிடம் 1 மணி நேரம், 14 நிமிஷங்கள் போராடி வீழ்ந்தாா்.
கலப்பு இரட்டையரில் சதீஷ்குமாா்/ஆத்யா வரியத் இணை 21-15, 22-20 என்ற கேம்களில் அல்ஜீரியாவின் தானியா வயலெட் மமேரி/கோசிலா மமேரி கூட்டணியை 34 நிமிஷங்களில் வென்று 2-ஆவது சுற்றுக்கு வந்துள்ளது.