முதலீடு செய்ய அவசரம் ஏன்? முதலுக்கே மோசமாகி விடுமே!

2 days ago
ARTICLE AD BOX

நமது குறிக்கோளுக்கு ஏற்ற முதலீட்டினைத் தேர்ந்தெடுக்கும் பொழுது, அவசரப்படாமல், அந்த முதலீட்டினை சரியாக புரிந்து கொண்டு தேர்ந்தெடுக்க வேண்டும். அவசரப்பட்டு தவறான முதலீட்டை நோக்கி நமது பணம் செலுத்தப்பட்டால், முதலீட்டில் நஷ்டம் ஏற்படலாம் அல்லது முதலுக்கே மோசம் ஆகலாம்.

இதனைக் குறித்த ஓர் ஈசாப் கதையைப் பார்ப்போம்.

ஒரு புறா கடுமையான தாகத்தில் இருந்தது. அப்போது அதன் கண்களில் தண்ணீர் நிரம்பிய ஒரு பெரிய கோப்பை தென்பட்டது. அதைக் கண்டவுடனே, அந்தக் கோப்பையை நோக்கி புறாவானது வெகு வேகமாக விர்ரென்று பாய்ந்து பறந்தது.

ஐயகோ! அது கோப்பையும் அல்ல. உள்ளே இருந்தது தண்ணீருமல்ல. தண்ணீரைத் தாங்கிய ஒரு கோப்பையின் பெரிய பதாகையே அது. புறா வேகமாக பறந்து வந்த காரணத்தினால் அந்தப் பதாகையின் மேல் மோதி தனது சமநிலையை இழந்து காயத்துடன் கீழே விழுந்தது. அது தரையில் விழுந்த போது, கீழே நின்று கொண்டிருந்த வழிபோக்கன் அதைப் பார்த்துச் சொன்னான்.

'முட்டாள்தனமாக நடந்துகொண்டாயே புறாவே! அது ஓவியம்தான்' என்றான்.

புறா தனது முட்டாள்தனமான செயலை உணர்ந்து கொண்டது.

இதையும் படியுங்கள்:
பணத்தைப் பரவலாக முதலீடு செய்வதன் அவசியம் என்ன தெரியுமா?
Investment

இங்கு தாகத்தில் இருந்த புறாவானது, அவசரப்பட்டு தண்ணீரைத் தாங்கிய கோப்பை இருந்த பதாகையை, தண்ணீரைத் தாங்கிய கோப்பை என்று தவறாக எண்ணிய காரணத்தினால், காயப்பட்டது. இங்கு புறாவானது, நமது பணத்தைப் போன்றது. தண்ணீர்க் கோப்பை என்பது, முதலீட்டைப் போன்றது. புறாவை நாம் தண்ணீர்க் கோப்பையை நோக்கி செலுத்தி இருந்தால், புறா தண்ணீரைக் குடித்து நன்றாக போஷாக்காக வளர்ந்து, இன்னும் நன்றாக செயல்பட்டு இருக்கும். நாம் அவசரப்பட்டு தண்ணீர்க் கோப்பையின் பதாகையை, தண்ணீர்க் கோப்பை என்று நினைத்து, அதில் புறாவை செலுத்தினால் நமது பணத்தின் வளர்ச்சி பாதிப்படையலாம் அல்லது முதலுக்கே மோசமாகலாம்.

எந்த ஒரு முதலீட்டையும் அதனை பொறுமையாக நன்கு புரிந்து கொண்ட பின்னரே, அதில் ஈடுபட வேண்டும். நம்மைத் தவறாக வழிநடத்துவதற்காக, சில முதலீட்டு ஆலோசகர்கள் இந்த முதலீடு சீக்கிரம் முடிய போகிறது உடனே முதலீடு செய்யுங்கள் என்று நம்மை அவசரப்படுத்தலாம். அது நம்மை அந்த முதலீட்டில் சிக்க வைப்பதற்காக இருக்கலாம்.

இரண்டு வகைகளில், தவறான முதலீடுகளில், நாம் சிக்கிக் கொள்கிறோம். ஒன்று தவறான முதலீடுகளை நம்மிடம் விற்பது (mis-sell), தவறான முதலீடுகளை நாம் வாங்குவது (mis-buy).

இதையும் படியுங்கள்:
மியூச்சுவல் ஃபண்டில் இந்த மாதிரி முதலீடு செய்தால் பணமழை தான்!
Investment

தவறான முதலீடுகளை நம்மிடம் விற்கும் போது, அவசரப்படுத்துதல் ஒரு முக்கிய காரணியாக அமைகிறது. நாம் முதலீட்டை புரிந்து கொண்டுவிட்டால், நாம் பின்வாங்கிவிடுவோம் என அவசரப்படுத்தப்படுவோம். தவறான முதலீடுகளை நாம் வாங்கும்போது, அந்த முதலீட்டை தவற விட்டுவிடுவோமோ என்கிற நம்முடைய அவசரப்படுதல் ஒரு முக்கிய காரணியாக அமைகிறது. இதனை ஆங்கிலத்தில், Fear of missing out, தவறவிட்டுவிடுவோமோ என்று பயப்படுதல் என்று அழைக்கப்படுகிறது. இந்த அவசரப்படுதல் காரணமாக, நாம் தவறான முதலீடுகளில் ஈடுபட வாய்ப்புண்டு.

உதாரணமாக, நமக்கு காலவரையறையுள்ள காப்பீட்டுத் திட்டம் போதுமானது. ஆனால், சில காப்பீட்டுத் தரகர்கள் முதலீடு சார்ந்த காப்பீட்டுத் திட்டங்களை நம்மிடம் விற்க முயலலாம். அந்தத் திட்டங்களில் அதிக தரகுத் தொகை காரணமாக, காப்பீட்டுத் தரகர்கள் அதிக இலாபத்தை அடைவார்கள். முதலீடு சார்ந்த காப்பீட்டுத் திட்டங்கள் இன்னும் சில நாட்களில் முடிந்து விடும் என நம்மை அவசரப்படுத்துவார்கள்.

பொறுமையாக யோசித்தால், முதலீட்டையும் காப்பீட்டையும் குழப்பிக் கொள்ளக் கூடாது. இரண்டின் குறிக்கோள்கள் வேறு. முதலீடு என்பது பணத்தைப் பெருக்க, காப்பீடு என்பது பணத்தைக் காக்க. காப்பீட்டுத் தரகர்களின் அவசரப்படுத்துதலால், நாம் முதலீடு சார்ந்த காப்பீட்டுத் திட்டத்தினைத் தேர்ந்தெடுத்தால், நமது முதலீட்டின் வளர்ச்சி குறைந்துவிடும். நடுவில் வெளியேற நினைத்தால், முதலீட்டின் தொகையில் பெரிய இழப்பைச் சந்திக்க நேரலாம்.

இதையும் படியுங்கள்:
அபாயங்கள் அறிந்து முதலீடு செய்வோம்!
Investment

தவறான முதலீடுகளை வாங்காமல் இருப்பதற்கு அவசரப்படாமல் இருக்க வேண்டும். முதலீட்டினை நன்கு புரிந்து அலசி ஆராய்ந்த பின்னரே அதில் இறங்க வேண்டும். அவசரப்படாமல் நமது குறிக்கோளுக்கு ஏற்ற முதலீட்டினைப் பொறுமையாக தேர்ந்தெடுத்து, அதில் இறங்க வேண்டும். அதன் மூலம் நமது முதலீடுகள் காக்கப்படும்.

Read Entire Article