ARTICLE AD BOX

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது டாஸ்மாக் ஊழல் விவகார வழக்கு பாயும். கைது செய்யப்படுவார் என்று பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை ஆவேசமாகக் கூறியுள்ளார். டாஸ்மாக் கடைகள் முன்பு தமிழ்நாடு பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அண்ணாமலை, தமிழிசை உள்ளிட்ட பாஜக தலைவர்களை கைது செய்து போலீஸ் காவலில் வைத்திருந்தனர். மாலை 7 மணி அளவில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
செய்தியாளர்களை சந்திந்த்த அண்ணாமலை, டெல்லி பாணியில் இல்லாமல் தமிழ்நாடு பாணியிலேயே முதலமைச்சர் மீது நடவடிக்கை பாயும் என்று கூறியுள்ளார். மேலும் சொத்து வழக்கில் குற்றவாளியாக சிக்கிய அமைச்சர் ரகுபதி எங்களுக்குப் பாடம் எடுக்க வேண்டாம் என்று கூறியுள்ளார்.
அடுத்த ஒரு வாரத்திற்கு பாஜக சார்பில் போராட்டம் நடக்கும், தேதி குறிப்பிடவோ காவல்துறையிடம் அனுமதியோ வாங்க மாட்டோம். பாஜகவுக்கு மரியாதை கொடுக்காத காவல்துறைக்கு பாஜக மரியாதை கொடுக்காது., இன்று இரவு முதல் காவல்துறையை தூங்க விடமாட்டேன் என்று அண்ணாமலை சபதம் எடுத்துள்ளார்.
மார்ச் 22ம் தேதி பஞ்சாப், மே.வங்க முதல்வர்கள், ஒடிசா , ஆந்திரா முன்னாள் முதல்வர்கள் மற்றும் தெலங்கானா, கர்நாடகா, கேரள முதல்வர்கள் பங்கேற்கும் தொகுதி மறுவரையறை குறித்த ஆய்வுக் கூட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டியுள்ள நிலையில் டாஸ்மாக் ஊழல் என்ற குற்றச்சாட்டையும், ஆர்ப்பாட்டத்தையும் நடத்தி முதலமைச்சரின் ஒருங்கிணைப்பு கூட்டத்தை திசை திருப்பும் முயற்சியாக பாஜக இதை செய்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும் டெல்லி முதலமைச்சராக இருந்த அர்விந்த் கேஜ்ரிவாலை இத்தகைய ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி சிறையில் அடைத்ததையும், அதே போல் முதலமைச்சர் ஸ்டாலினையும் கைது செய்யவும் பாஜக தயங்காது என்றும் பேச்சுக்கள் எழுந்துள்ளது.
மிசாவையே எதிர்த்து சிறை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கைது நடவடிக்கை எடுபடாது. மக்கள் மத்தியில் குறிப்பாக பெண்களிடம் பெரும் செல்வாக்கு பெற்றுள்ள முதலமைச்சரை கைது செய்தால் அவர் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிப்பார். அந்தத் தவறை பாஜக ஒருபோதும் செய்யாது என்றும் கூறப்படுகிறது.