ARTICLE AD BOX
முட்டை கொத்து தோசை ரெசிபி... ஒரு தடவ செஞ்சு பாருங்க... இனிமே ஹோட்டலுக்கே போகமாட்டிங்க...!
Egg Kothu Dosa Recipe in Tamil: தினமும் இட்லி, தோசை போன்றவையே பெரும்பாலான வீடுகளில் இரவு உணவாக இருக்கும். அதேசமயம் ஹோட்டலில் வாங்க வேண்டுமென்றால் அனைவரின் விருப்பமாகவும் இருப்பது புரோட்டாதான். தென்னிந்தியர்களால் குறிப்பாக தமிழர்கள் அதிகம் விரும்பப்படும் உணவுகளில் ஒன்று புரோட்டா. புரோட்டாவின் மற்றொரு வடிவம்தான் கொத்து புரோட்டா.
இரண்டு புரோட்டோவை பிய்த்து போட்டு அதில் முட்டையை உடைத்து ஊற்றி சால்னாவை சேர்த்து கரண்டியால் கொத்தி கொடுக்கப்படும் கொத்து புரோட்டாவை விரும்பாத தமிழர்களே இல்லை. புரோட்டாவைப் போலவே நாம் தோசையையும் நாம் கொத்து தோசையாக சாப்பிடலாம். அதற்கு ஹோட்டலுக்குத்தான் போக வேண்டுமென்ற அவசியமில்லை.

வீட்டிலேயே சூப்பரான முட்டை கொத்து தோசையை செய்து டின்னருக்கு கொடுத்தால் வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். குறிப்பாக குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த பதிவில் காரசாரமான முட்டை கொத்து தோசையை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.
தேவையானப் பொருட்கள்:
- முட்டை - 2
- ஊத்தாப்ப தோசை - 3
- குருமா - 5 ஸ்பூன்
- பெரிய வெங்காயம் - 1
- தக்காளி - 1
- பச்சை மிளகாய் - 1
- கறிவேப்பிலை சிறிதளவு
- கொத்தமல்லி சிறிதளவு
- கரம் மசாலா - அரை ஸ்பூன்
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் - 2 ஸ்பூன்
செய்முறை:
- பெரிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை சிறிது சிறிதாக நாறுக்கிக் கொள்ளவும்
- அடுப்பில் தோசை கல்லை வைத்து எண்ணெய் சேர்த்து நறுக்கி வைத்த வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்
- வெங்காயம் மற்றும் தக்காளி நன்கு வதங்கிய பின் இரண்டு முட்டையை உடைத்து அதில் சேர்த்து நன்கு வதக்கவும்.
- முட்டை வதங்கிய பின் சிறிதளவு உப்பு கரம் மசாலா சேர்த்து கலந்து விடவும்
- ஊத்தாப்பத்தை சிறு சிறு துண்டுகளாக பிய்த்து அதில் சேர்க்கவும்.
- ஊத்தாப்பத்தை சேர்த்த பின் குருமாவையும் சேர்த்துக் கொள்ளவும்.
- இப்பொழுது குருமா மற்றும் ஊத்தாப்பம் இரண்டையும் சேர்த்து தோசை கரண்டி வைத்து நன்றாக கொத்தி கொத்தி விடுவோம்.
- இரண்டும் நன்றாக கலந்து பின் இந்த கலவை நன்கு ட்ரை ஆனதும் இறுதியாக கொத்தமல்லி தூவி இறக்கினால் முட்டை கொத்து தோசை.
- தேவைப்பட்டால் 1 ஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்துக் கொள்ளவும். இது சுவையை மேலும் அதிகரிக்கும்.