ARTICLE AD BOX
இந்தியாவின் இளம் வேகப்பந்துவீச்சாளரான ஹர்சித் ரானா ஒரு கனவு தொடக்கத்தை சர்வதேச கிரிக்கெட்டில் பெற்றுள்ளார். ஐபிஎல்லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய ஹர்சித் ரானா, தன்னுடைய அபாரமான செயல்பாடு காரணமாக இந்திய அணியில் அறிமுகத்தை பெற்றார்.
இந்திய அணியில் அடுத்தடுத்த தொடர்களில் அறிமுகமான ஹர்சித், டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி20 கிரிக்கெட் என மூன்றுவிதமான அறிமுக போட்டியிலும் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி ஒரு கனவு தொடக்கத்தை பெற்றுள்ளார்.
பெர்த்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தனது முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திய ஹர்சித், பின்னர் புனேவில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் மூன்று இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை வெளியேற்றினார். அதற்குபிறகு இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகம் பெற்ற அவர், நாக்பூரில் நடந்த போட்டியில் மூன்று பேட்ஸ்மேன்களை வெளியேற்றினார்.
இந்நிலையில் இந்திய அணி முகமது சிராஜுக்கு பதிலாக ஹர்சித் ரானாவின் மீது அதிக கவனம் செலுத்துவது குறித்து முன்னாள் இந்திய வீரர் பார்த்தீவ் படேல் பேசியுள்ளார்.
சிராஜை விட ஹர்சித் சிறந்தவர்..
இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டிக்கு பிறகு பேசிய பார்த்தீவ் படேல், எதற்காக இந்திய அணி முகமது சிராஜை தவிர்த்து ஹர்சித் ரானா மீது அதிக கவனம் செலுத்துகிறது என்பதற்கான காரணத்தை வெளிப்படுத்தினார்.
ஹர்சித் ரானா குறித்து பேசிய அவர், “ஹர்ஷித் ரானா முகமது சிராஜை விட சிறந்த பந்து வீச்சாளர், ஏனெனில் சிராஜால் பழைய பந்தில் நன்றாக பந்து வீச முடியாது. ஆனால் ரானாவால் பழைய பந்தில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும், அதனால்தான் அவர் சிராஜுக்கு முன்னதாக அணியில் இருக்கிறார்” என்று கூறினார்.
இதற்குமுன்பு சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் சிராஜ் இல்லாததற்கான காரணத்தை பகிர்ந்த ரோகித் சர்மா, “பழைய பந்தைப் பயன்படுத்தும்போது சிராஜின் தாக்கம் குறைகிறது, அவரால் தொடர்ந்து சிறப்பாக பந்து வீச முடியவில்லை. புதிய பந்து, மிடில் ஓவர்கள் மற்றும் போட்டியின் கடைசி கட்டத்திலும் சிறப்பாக பந்து வீசக்கூடிய ஒரு பந்து வீச்சாளர் எங்களுக்குத் தேவை” என ரோகித் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.