ARTICLE AD BOX
நடிகர் அஜித் குமார் மீண்டும் கார் விபத்தில் சிக்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக ஊடகத்தில் பரவி வருகிறது.
விடாமுயற்சி, குட் பேட் அக்லி திரைப்படங்களுக்கு நடுவே நடிகர் அஜித் குமார் வீனஸ் மோட்டர்ஸ் டூர்ஸ் என்கிற தன் இருசக்கர பயண நிறுவனத்தைத் தொடங்கினார்.
இருசக்கர வாகனத்தில் தொலைத்தூரப் பயணங்களைத் திட்டமிடுபவர்களுக்கான தளமாக இது செயல்பட்டுவருகிறது. இதைத் தொடர்ந்து 'அஜித் குமார் ரேஸிங்' என்கிற கார் பந்தயத்திற்காக சர்வதேச அளவிலான வீரர்களை ரேஸிங்கில் ஈடுபட வைக்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறார்.
இந்த நிலையில், ஸ்பெயினில் நடந்து வரும் Porsche Sprint Challenge என்ற கார் பந்தயத்தில் பங்கேற்றிருந்த நடிகர் அஜித் குமாரின் கார் விபத்துக்குள்ளானது. ரேஸிங்கில் ஈடுபட்டபோது மற்றொரு கார் குறுக்கே வந்து மோதியதில் அஜித் கார் தலைகீழாக கவிழ்ந்து விபத்து நேரிட்டது. இந்த விபத்தில் நடிகர் அஜித்துக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என்றும் அவர் தற்போது நலமுடன் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விபத்து குறித்து அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திர தனது எக்ஸ் தளத்தில், ”கார் பந்தயத்தின் 5ஆவது சுற்றில் அஜித்குமார் 14ஆவது இடத்தை பிடித்து அனைவரது பாராட்டுகளையும் பெற்றார். 6ஆவது சுற்றில் எதிர்பாராத விதமாக மற்ற கார்கள் மீது மோதியதில் 2 முறை விபத்து ஏற்பட்டது. அஜித் மீது தவறு இல்லை. அவர் நலமுடன் உள்ளார்” என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, போர்த்துகல் நாட்டில் நடந்த ரேஸில் அஜித்தின் கார் விபத்தில் சிக்கியது. அதன்பின்னர் துபையில் நடந்த போட்டியில் பங்கேற்ற அஜித்தின் கார் மீண்டும் விபத்தில் சிக்கியது. இந்த நிலையில், மூன்றாவது முறையாக அஜித் குமாரின் கார் மீண்டும் விபத்துக்குள்ளாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.