ARTICLE AD BOX
மீண்டும் ஊழியர்களை வீட்டிற்கு அனுப்பிய கூகுள்.. என்ன காரணம்-ன்னு பாத்தீங்களா?
தொழில்நுட்ப உலகில் முன்னணி வகிக்கும் கூகுள் நிறுவனம் தனது கிளவுட் பிரிவில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளதாக ப்ளூம்பெர்க் நியூஸ் புதன்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது. டிஜிட்டல் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் சூழலில் கூகுள் நிறுவனத்தின் இந்த நடவடிக்கை பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. தற்போது இந்த பணி நீக்கம் ஏன் ஏற்பட்டது? இதன் பின்னணியில் இருக்கும் காரணம் என்ன? என்பதை பார்ப்போம்.
வாடிக்கையாளர்களின் தேவைகளையும், வரவிருக்கும் புதிய வாய்ப்புகளையும் பூர்த்தி செய்வதற்காக கூகுள் நிறுவனம் தொடர்ந்து சில பல மாற்றங்களை செய்து வருவதாக அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் ப்ளூம்பெர்க்கிடம் தெரிவித்துள்ளார்.

இந்த மாத தொடக்கத்தில் கூகுள் நிறுவனத்தின் கிளவுட் வணிகத்திற்கான வருவாய் ஆய்வாளர்கள் கணித்த கணிப்பை விட குறைவாக இருந்தது. அதே நேரம் 2025-ஆம் ஆண்டில் நிறுவனம் செய்த செலவுகள் எதிர்பார்ப்பை மீறி அதிகரித்தது. இதன் காரணமாகவும் இந்த பணி நீக்கம் நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
கூகுள் நிறுவனத்தில் இருக்கும் கிளவுட் பிரிவு அந்நிறுவன வளர்ச்சிக்கு பெரிதும் உதவக்கூடிய ஒரு முக்கியமான பிரிவு. எனவே சந்தையின் தேவைகளுக்கு ஏற்ப நிறுவனத்தின் பொருளாதாரத்தை மாற்றி அமைக்கும் நோக்கில் கூகுள் சில மாற்றங்களை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாகவே தற்போது சில ஊழியர்களை பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கூகுள் பணி நீக்கம் செய்வது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னரும் சிறிய அளவிலான பணி நீக்கங்களை கூகுள் செய்தது. இதன் தொடர்ச்சியாகவே தற்போதும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளது. கிளவுட் பிரிவு பணி நீக்கங்களுக்கு முன்பு 2024-ஆம் ஆண்டில் ஜனவரி மாதம் கூகுள் நிறுவனம் அதன் "பிளாட்பார்ம்ஸ் அண்டு டிவைஸ்" பிரிவில் தானாக நிறுவனத்தை விட்டு வெளியேறும் ஒரு திட்டத்தை அறிவித்தது. முக்கியமாக கூகுள் நிறுவனத்தின் பிரபல தயாரிப்புகளான ஆண்ட்ராய்டு, பிக்சல், க்ரோன் மற்றும் நெஸ்ட் ஆகியவற்றில் பணி புரியும் ஊழியர்களுக்காக இந்த அறிவிப்பை வெளியிட்டது.
இந்த திட்டத்தின்படி, ஊழியர்கள் தாங்களாகவே நிறுவனத்தை விட்டு வெளியேற விரும்பினால், அவர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும். இந்த தன்னார்வ வெளியேறும் திட்டத்தின் நோக்கம், நிறுவனத்தின் செயல்பாடுகளை சீரமைக்கும் நோக்கில் எடுக்கப்பட்டது.