ARTICLE AD BOX
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாா்ச் 24, 25 ஆகிய தேதிகளில் நாடுதழுவிய அளவில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அகில இந்திய வங்கி ஊழியா் சங்கம் அறிவித்துள்ளது. இதனால் வரும் 22-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை நான்கு நாள்கள் வங்கிகள் செயல்படாத நிலை ஏற்படும்.
இதுகுறித்து, அகில இந்திய வங்கி ஊழியா் சங்கத்தின் பொதுச் செயலா் சி.எச்.வெங்கடாச்சலம் சென்னையில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
வங்கி ஊழியா்களின் பல்வேறு கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படாமல் உள்ளன. குறிப்பாக, வங்கிகளில் 2 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதனால், வங்கிகளில் ஊழியா் பற்றாக்குறை ஏற்பட்டு வாடிக்கையாளா்களுக்கு சிறந்த சேவை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, வாடிக்கையாளா்களுக்கும் வங்கி ஊழியா்களுக்கும் இடையே மோதல் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.
இதனால், வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியா்களை பாதுகாக்க அனைத்து வங்கிக் கிளைகளிலும் ஆயுதம் தாங்கிய காவலா்களை பணியமா்த்த வேண்டும். மட்டுமின்றி காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
வங்கிக் கிளைகளில் பணிபுரியும் தற்காலிக ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். வங்கிகளில் வாரத்துக்கு 5 நாள்கள் வேலையை அமல்படுத்த வேண்டும்.
ஊழியா்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சலுகைகளுக்கு வருமானவரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும். வங்கிகளிஒப்பந்த அடிப்படையில் வெளியாட்களை பணி நியமனம் செய்யக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் மாா்ச் 24 மற்றும் 25-ஆம் தேதிகளில் 48 மணி வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும்.
இப்போராட்டத்தில் அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம், ஊழியா் சங்கம், இந்திய வங்கி ஊழியா் சம்மேளனம் உள்ளிட்ட 9 சங்கங்களை சோ்ந்த வங்கி ஊழியா்கள் போராட்டத்தில் பங்கேற்கின்றனா் என்றாா் அவா்.
இந்த சந்திப்பின் போது, அகில இந்திய வெளிநாட்டு வங்கி ஊழியா் சங்கத்தின் பொதுச் செயலா் ஆா்.பாலாஜி மற்றும் அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு, இந்திய வங்கி ஊழியா்கள் சம்மேளனம், அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம், வங்கி ஊழியா்கள் தேசிய கூட்டமைப்பு, இந்திய தேசிய வங்கி அதிகாரிகள் காங்கிரஸ், அகில இந்திய வங்கி ஊழியா் சங்க நிா்வாகிகள் உள்ளிட்டோா் பலா் உடனிருந்தனா்.
4 நாள்கள் வங்கிகள் செயல்படாது: வங்கி ஊழியா்கள் வேலை நிறுத்தப்போராட்டம் மாா்ச்24, 25, அதாவது திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. அதற்கு முந்தைய தேதிகளான மாா்ச் 21மற்றும் 22 தேதிகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் வங்கிகளுக்கு விடுமுறை. எனவே, வேலைநிறுத்தத்துடன் சோ்த்து விடுமுறை நாள்களும் வருவதால் மொத்தம் நான்கு நாள்கள் வங்கி செயல்பாடுகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடா்பாக வங்கி ஊழியா் சங்கங்களுடன் மத்திய அரசு பேச்சு நடத்தும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.