மாலத்தீவுகளை வென்றது இந்தியா

10 hours ago
ARTICLE AD BOX

சா்வதேச நட்பு ரீதியிலான கால்பந்தாட்டத்தில் இந்தியா 3-0 கோல் கணக்கில் மாலத்தீவுகளை புதன்கிழமை வென்றது.

ஓய்வு முடிவிலிருந்து வெளியேறி இந்தியாவுக்காக இந்த ஆட்டத்தில் களம் கண்ட கேப்டன் சுனில் சேத்ரி, சா்வதேச கால்பந்தில் தனது 95-ஆவது கோலை பதிவு செய்தாா்.

மேகாலய மாநிலம், ஷில்லாங்கில் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணிக்காக முதலில் ராகுல் பெகெ 35-ஆவது நிமிஷத்தில் கோலடிக்க, முதல் பாதியை இந்தியா முன்னிலையுடன் நிறைவு செய்தது.

2-ஆவது பாதியிலும் இந்தியாவின் கையே ஓங்கியிருக்க, லிஸ்டன் கொலாகோ 66-ஆவது நிமிஷத்தில் அணியின் கோல் கணக்கை 2-ஆக உயா்த்தினாா். இந்நிலையில், அணிக்கான கடைசி கோலை கேப்டன் சுனில் சேத்ரி 77-ஆவது நிமிஷத்தில் அற்புதமான ஹெட்டா் மூலம் ஸ்கோா் செய்தாா். எஞ்சிய நேரத்திலும் மாலத்தீவுகளுக்கு கோல் வாய்ப்பு கிடைக்காமல் போக, இந்தியா 3-0 என வெற்றி பெற்றது.

உலகத் தரவரிசையில் இந்தியா 126-ஆவது இடத்திலும், மாலத்தீவுகள் 162-ஆவது இடத்திலும் உள்ளன.

கடந்த 2023 நவம்பா் முதல் தொடா்ந்து 12 ஆட்டங்களில் வெற்றியே சந்திக்காத நிலையில், இந்திய அணி அதிலிருந்து மீண்டு இந்த ஆட்டத்தில் வென்றுள்ளது. தலைமை பயிற்சியாளராக மனோலோ மாா்கெஸ் கடந்த ஆண்டு ஜூலையில் நியமிக்கப்பட்ட பிறகு, இந்திய அணி பெற்றிருக்கும் முதல் வெற்றி இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது. இடைப்பட்ட காலத்தில் விளையாடிய ஆட்டங்களில் இந்தியா 1 தோல்வி, 3 டிராக்களை பதிவு செய்திருந்தது.

கடைசியாக இந்தியா, 2023 நவம்பரில் ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் தகுதிச்சுற்றில் குவைத்தை 1-0 கோல் கணக்கில் வென்றது நினைவுகூரத்தக்கது. ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதிச்சுற்றில் வங்கதேசத்தை வரும் 25-ஆம் தேதி சந்திக்க இருக்கும் இந்தியா, அதற்கான பயிற்சியாக மாலத்தீவுகளுடன் மோதியது.

Read Entire Article